scorecardresearch

திருமங்கலம் பார்முலாவை மிஞ்சும் ஈரோடு கிழக்கு : தி.மு.க, அ.தி.மு.க தேர்தல் பணிமனைகளுக்கு சீல்

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பணிமனை என்ற பெயரில் கூடாரங்கள் அமைத்து வாக்காளர்களை, திமுகவினர் அடைத்து வைக்கப்படுவதாக அதிமுக சார்பில் குற்றச்சாட்டு எழுந்தது

திருமங்கலம் பார்முலாவை மிஞ்சும் ஈரோடு கிழக்கு : தி.மு.க, அ.தி.மு.க தேர்தல் பணிமனைகளுக்கு சீல்

ஈரோடு கிழக்கு தொகுதியில் அனுமதி பெறாமல் திமுக மற்றும் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டு இருந்த 14 தேர்தல் பணிமனைகளுக்கு (கூடாரங்கள்) தேர்தல் பிரிவு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பணிமனை என்ற பெயரில் கூடாரங்கள் அமைத்து வாக்காளர்களை, திமுகவினர் அடைத்து வைக்கப்படுவதாக அதிமுக சார்பில் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தொகுதியில் இரு கட்சிகளின் சார்பிலும் அமைக்கப்பட்டு உள்ள தேர்தல் பணிமனைகளில் (கூடாரங்கள்) போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில் முறையாக அனுமதி பெறாத தேர்தல் பணிமனைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இதில்திமுக சார்பில் ஈரோடு கள்ளுக்கடை மேடு, பெரியார் நகர், கல்யாண சுந்தரம் வீதி ஆகிய இடங்களில் தலா ஒரு தேர்தல் பணிமனை மற்றும் கருங்கல் பாளையத்தில் அமைக்கப்பட்டு இருந்த 7 பணிமனைகள் என மொத்தம் 10 தேர்தல் பணிமனைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

அதேபோல், அதிமுக சார்பில் ஈரோடு கருங்கல்பாளையம், கல்யாண சுந்தரம் வீதி, அந்தோனியார் வீதி, மணல்மேடு உள்ளிட்ட நான்கு இடங்களில் செயல்பட்ட அனுமதி பெறாத தேர்தல் பணிமனைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் இரு கட்சிகளின் நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் அலுவலர்களிடம் முறையிட்ட, திருச்சி முன்னாள் எம்பி ப.குமார் கூறுகையில்; ஆளும் கட்சியினர் தங்களுக்கு உள்ள அதிகார பலத்தாலும், பண பலத்தாலும், ஆளும் கட்சி அமைச்சர்களின் விட்டமின் “பா” கவனிப்பாலும் இடைத்தேர்தலில் சட்டத்துக்கு அத்துமீறி செயல்படுகின்றனர். ஆட்டு மந்தையில் அடைத்து வைப்பது போல் வெளியில் இருந்து ஆட்களை கூட்டி வந்து 120 இடங்களில் பொதுமக்களை அடைத்து வைத்திருக்கின்றனர்.

மேலும், மேற்கண்ட கூடாரங்களில் வாக்காளர்களுக்கு தனிப்பட்ட முறையில் கூப்பன் ஒன்று கொடுக்கப்பட்டு வருகின்றது. அந்த கூப்பன்களை கொண்டு வந்து கொடுக்கும் வாக்காளர்களிடம் ரூ.500-ம், அதற்கு மேலும் ரொக்கம் கொடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள திமுகவினருக்கும், வாக்காளர்களுக்கும் விருந்துl அமர்க்களப்படுகிறது.

பெரும்பான்மையான வாக்காளர்கள் ஆளும் கட்சியின் மேல் உள்ள அதிருப்தியால் அதிமுகவுக்கு ஆதரவாக வாக்களிக்க இருப்பதாக எங்களிடம் தெரிவிக்கின்றனர். திமுகவினர் சொன்ன திட்டங்கள் எதையும் செயல்படுத்தாதது இந்த இடைத்தேர்தலில் எதிரொலிக்கும். மேலும், தினமும் வாக்காளர்களை கூட்டி வந்து கூடாரத்தில் அடைத்து பணம் கொடுப்பதை முதலில் தேர்தல் பார்வையாளர்கள் தடுத்து நிறுத்த வேண்டும்.

120 இடங்களை முதலில் ஆய்வு செய்து அங்குள்ள திமுகவினரை வெளியேற்ற வேண்டும். எடப்பாடியார் உயர் நீதிமன்றத்தில் கொடுத்த வழக்கின்படி, நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவுக்கு ஏற்ப தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செயல்பட வேண்டும் என்றார். தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் இந்த இடைத்தேர்தல் திருமங்கலம் ஃபார்முலாவை மிஞ்சும் அளவிற்கு இருப்பதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல்

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu erode east by election dmk and admk election booth seal

Best of Express