ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 39 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டசபைக்கு செல்ல உள்ளார்.
தமிழகத்தில் காலியாக இருந்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் கே.எஸ் தென்னரசை 66,234 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
மொத்தம் 1,79,948 வாக்குகள் பதிவான இந்த தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன், 1,10,156 வாக்குகளும், அதிமுகவின் தென்னரசு 43,922 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் மேனகா 10, 827 வாக்குகளும், தேமுதிகவின் ஆனந்த் 1432 வாக்குகளும் பெற்றனர். இதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்ற நிலையில் தென்னரசு டெபாசிட் பெற்றார். மற்ற இருவரும் டெபாசிட் இழந்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் ஈவேரா திருமகன் மரணமடைந்ததை தொடர்ந்து அவரது அப்பாவும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள இவர், கடந்த 2019-ம் ஆண்டு நடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
கடந்த 1996, 2004, 2009, மற்றும் 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட இவிகேஎஸ் 2004-ம் ஆண்டு கோபிசெட்டிபாளையம் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். அதற்கு முன்பே 1984-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈரோடு சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார். இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் டி.கே சுப்பிரமணியத்தை எதிர்த்து போட்டியிட்டு 25 ஆயிரத்திற்கு அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அதனைத் தொடர்ந்து 1989-ம் ஆண்டு ஈரோடு பவானி சாகர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு அதிமுக வேட்பாளர் வி.கே.சின்னச்சாமியிடம் தோல்வியை தழுவினார். 1984-ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இருந்து சத்தியமங்கலம் தொகுதியில் திமுக வேட்பாளரை தோற்றகடித்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தற்போது 39 ஆண்டுகளுக்கு பிறகு திமுக கூட்டணியில் இருந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளரை 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மீண்டும் சட்டசபைக்கு செல்ல உள்ளார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil