மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பிப்ரவரி 1-ம் தேதி 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அவர் தொடர்ச்சியாக தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் ஆகும். விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், 2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட், புதிய அரசு அமைந்த பிறகே அறிவிக்கப்படும். எனவே, இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் ஆகும்.
இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், “கடந்த 10 ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் பெரும் பாய்ச்சலில் முன்னேறி வருகிறது. பிரதமர் மோடியின் பல்வேறு திட்டங்களால் நாடு பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. வளர்ச்சியின் பயன்கள் ஏழை, எளிய மக்களை அடையத் தொடங்கியுள்ளன. எங்களின் வளர்ச்சி பணிகளுக்காக மக்கள் மீண்டும் வலுவான பெரும்பான்மையுடன் எங்களை ஆட்சியில் அமர்த்துவர்.
சமூக நீதியை அரசின் கொள்கையாக கொண்டு செயல்படுகிறோம். சமூக நீதி என்பது அரசின் வாக்கியமாக இருந்ததை திட்டங்களுக்கான மந்திரமாக பயன்படுத்தி வருகிறோம். நாட்டில் விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் ஆகிய 4 பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அனைவருக்கும் வங்கி கணக்கு, அனைவரும் சமையல் எரிவாயு என்ற நிலையை எட்டியுள்ளோம் என வரிசைப்படுத்தினார்.
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மத்திய பட்ஜெட்டில் டெல்டா மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்புகன் என்னவாக இருந்தது?
மத்திய அரசு விவசாய பொருட்களின் ஆதரவு விலையை அதிகப்படுத்தி அதனை சட்டமாக்க வேண்டும். பயிர் காப்பீடு தொகையின் மத்திய அரசின் பங்கை அதிகப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். உரங்களுக்கான மானியத்தை அதிகரித்து பொட்டாஸ் உள்ளிட்ட உரங்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரிசி கோதுமை தவிர மற்ற விவசாய உற்பத்தி பொருளையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும். இறக்குமதியை குறைக்க வேண்டும். எண்ணெய் வித்துக்கள் பருப்பு உள்ளிட்ட வகைகளுக்கும் கூடுதலாக மானியம் வழங்க வேண்டும். மாநில அரசின் நீர் பாசன திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும். டெல்டா மாவட்டங்களில் வேளாண் சார்ந்த மதிப்பு கூட்டு பொருள் உற்பத்தி செய்யும் வகையில் விவசாயம் பாதிக்கப்படாத வகையில் தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் என்ற பல்வேறு எதிர்ப்பார்ப்புகள் இருந்தது.
இந்நிலையில், பட்ஜெட் தாக்கலில் மேற்கூறிய திட்டங்கள் நிறைவேறியதா? மேலும், விவசாய சங்கங்கள் எதிர்பார்ப்பது என்ன? இதுதொடர்பாக விவசாயிகளின் சங்கத்தைச் சேர்ந்த கே.வி.இளங்கீரனிடம் கேட்டபோது;
இந்த பட்ஜெட் ஏமாற்றத்தை தந்திருக்கின்றது. விவசாயிகளுக்கு பெரிய அளவில் அரசாங்கம் இதுவரை எதுவும் செய்ததில்லை. விவசாயிகளுக்கு முக்கியமானது நீர். மத்தியில் இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ‘இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைப்போம், விவசாயிகளின் வருமானத்தை நாங்கள் இரட்டிப்பாக்குவோம், மின்சாரம் இலவசமாக கொடுப்போம், சூரிய தகடு பொருத்த நடவடிக்கை எடுப்போம்’ என்று கூறியிருந்தார்கள்.
ஆனால், இதுபோன்ற எந்த விஷயமும் இதுவரை நடைபெறவில்லை. இது ஒட்டுமொத்தமாக விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அடுத்ததாக கடன் தள்ளுபடி ஒன்றும் செய்யவில்லை, பல ஆயிரம் கோடிகள் கடன் உள்ள பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்யும் மத்திய அரசு, விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யலாம்தானே, இந்த பட்ஜெட்டில் அதை எதிர்ப்பார்த்தோம், ஏமாற்றமே மிஞ்சியது.
மொத்தத்தில் இந்த இடைக்கால பட்ஜெட் சொல்வதற்கு ஒன்றுமில்லாத பட்ஜெட்டாக இருக்கின்றது. சுயதம்பட்டத்தை தவிர இந்த பட்ஜெட்டில் எதுவுமே இல்லை. விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை தந்த பட்ஜெட்டாகவே இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.