Tamilnadu Farmer Association requests to build 10 check dams in Cauvery delta: கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையையொட்டி கடந்த 15 நாட்களாக காவிரி காவிரி கொள்ளிடத்தில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்த நீர் அனைத்தும் வீணாக கடலில் கலப்பது வேதனை அளிக்கக்கூடிய விஷயமாக இருக்கிறது.
இந்த நிலையில் தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வி.இளங்கீரன் தமிழக முதல்வருக்கு விடுத்துள்ள கோரிக்கையில், கேரளா, கர்நாடகாவில் இருந்து வரும் பல லட்சம் டி.எம்.சி நீர், கடலில் வீணாவதைத் தடுக்க, முக்கொம்பு முதல் அணைக்கரை வரை 10 இடங்களில் கதவணை கட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படியுங்கள்: உதயநிதி உத்தரவை தலைமேல் ஏற்று செயல்படுத்துவோம்: திருச்சி விழாவில் கே.என் நேரு உறுதி
இதுகுறித்து கே.வி.இளங்கீரன் தெரிவித்ததாவது: கர்நாடகா நீர் தரவில்லை என்று பல்வேறு போராட்டங்கள், சட்ட ரீதியான நடவடிக்கைகள் என பல கோடி ரூபாய் செலவு செய்து வருகிறோம்.
இந்த நிலையில், கேரளா, கர்நாடகாவில் கடும் மழையின் காரணமாக அங்கிருந்து வந்த பல லட்சம் டிஎம்சி நீர், தமிழகத்தில் கொள்ளிடம், காவிரி வழியாகச் சென்று, வீணாக கடலில் கலந்துள்ளது. இது காவிரி டெல்டா பாசன விவசாயிகளுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2022/08/WhatsApp-Image-2022-08-29-at-7.39.12-PM.jpeg)
கொள்ளிடத்தில் மேலணை (முக்கொம்பு) முதல் கீழணை (அணைக்கரை) வரை 10 இடங்களில் நீரை சேமிக்கும் விதமாக கதவணை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே அரசிடம் டெல்டா பாசன விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகிறோம்.
முதல்வர் ஸ்டாலின், தமிழக விவசாயிகள் மீது கொண்டுள்ள அக்கறையின் காரணமாக தமிழகத்தில் முதன் முதலாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதுமே, வேளாண்மைக்கு தனி பட்ஜெட் வெளியிட்டு மகிழ்ச்சியை ஏற்படுத்தினார். தொடர்ந்து, விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்தார்.
அந்த வரிசையில், காவிரி டெல்டா பகுதியில் 10 இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும். முதல்கட்டமாக 2022-23-ம் ஆண்டில் குறைந்தது 3 இடங்களிலாவது தடுப்பணை கட்டி, காவிரி டெல்டா பாசனப் பகுதிகளின் நீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். தானும் ஒரு டெல்டா மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதை நிரூபிக்கும் விதமாக, டெல்டா விவசாயிகளின் தேவையை அறிந்து பூர்த்தி செய்யும் முதல்வர், இந்த கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.
க. சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil