Advertisment

தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கிறது; பி.ஆர். பாண்டியன்

author-image
WebDesk
Jan 20, 2023 13:28 IST
New Update
Due to the closure of Mettur Dam there is a risk of damage to 2 lakh crops

மேட்டூர் அணையில் இருந்து குறைந்தபட்சம் பிப்ரவரி 15-ந்தேதி வரை தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே பயிர்களை காப்பாற்ற முடியும் என பி.ஆர். பாண்டியன் கூறினார்.

மத்திய அரசு நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய குழு அமைத்து தீர்வு காணப்படும் என்று அறிவித்தது. ஆனால் அது தொடர்பாக தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

Advertisment

மேலும் இதுவரை விலை நிர்ணயம் செய்வதற்கான எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் மத்திய அரசு ஏமாற்றி வருவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனவே மத்திய அரசுக்கு எதிராக தீவிரமான போராட்டத்தை ஒருங்கிணைக்கும் வகையில், அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்ய திருச்சியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் உயர்மட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு மாநில கவுரவ தலைவர் எம்.பி.ராமன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் பாரூக், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனியப்பன்  உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பின்னர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;

மத்திய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றபோது, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு இரட்டிப்பு லாபம் தருவதாக கூறினார்கள். அதனை நிறைவேற்றவில்லை. அதைத் தொடர்ந்து டெல்லியில் விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு ஓராண்டு காலம் போராட்டம் நடத்தினார்கள்.

அப்போது பிரதமர் மோடி குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க குழு அமைப்பதாக உறுதி அளித்தார். ஆனால் போராட்டம் திரும்ப பெறப்பட்டு ஓராண்டு காலம் நிறைவு பெற்ற பின்னரும், ஆதார விலை கொடுப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் பிப்ரவரி மாதம் 1-ம் தேதி பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது.

இதில் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு இரட்டிப்பு விலை வழங்கவும், குறைந்தபட்ச ஆதார விலை வழங்கவும் நடவடிக்கை எடுக்க அறிவிப்பு வெளியிட வேண்டும். இல்லையெனில் வருகிற மார்ச் 1-ம் தேதி குமரி முதல் டெல்லி வரை மேற்கண்ட அமைப்பு சார்பில் நீதி கேட்டு வாகன பயணம் மேற்கொள்வோம்.

இந்த பயணத்தின் போது செல்லும் வழியில் 12 மாநில முதல்வர்களை சந்திக்க இருக்கிறோம்.

இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு முதல்வர் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும்.

அதேபோன்று தமிழ்நாடு முதல்வர் கடந்த 2021 தேர்தல் அறிக்கையின்போது, நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 வழங்குவதாக வாக்குறுதி அளித்தார். தற்போது 3-வது பருவ சம்பா கொள்முதல் தொடங்கி விட்டது.

தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வழங்கவேண்டும். கலைஞர் ஆட்சியின் கொள்கைக்கு மாறாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுப்பது தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு செய்யும் துரோகம்.

திருப்புவனம் ஆரூண் சர்க்கரை ஆலையில் 2015 முதல் 2018 வரை விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத்தொகையினை வழங்கவில்லை.

மேலும், 13 ஆயிரம் விவசாயிகளின் பெயரில் அந்த சர்க்கரை ஆலை நிர்வாகம் ரூ.300 கோடி வங்கிகளில் கடன் பெற்றதற்கு, விவசாயிகள் வங்கிகளின் நடவடிக்கைகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள். இதனை கண்டித்து நாங்கள் போராட்டம் நடத்தியபோது, அன்றைய எதிர்க்கட்சி தலைவரும், தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆதரவளித்தார்.

மேலும் அந்த ஆலை அரசுடமையாக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். ஆனால் இன்று மற்றொரு நபருக்கு அந்த ஆலை கைமாறியிருப்பதாக சொல்கிறார்கள். ஆலைக்கு எதிராக போராடக்கூடிய விவசாயிகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு தொடுக்கிறது.

தமிழக காவல் துறையினர் ஆலைக்கு பாதுகாப்பு அளிக்கிறார்கள். இதுவும் தமிழ்நாடு விவாசயிகளுக்கான துரோகமாகும் எனத் தெரிவித்தார்.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment