குடிநீரை காரணம் காட்டி மேட்டூர் அணை தண்ணீரை பாசனத்திற்கு பயன்படுத்த மறுப்பது கண்டிக்கத்தக்கது பிப்ரவரி இறுதிவரை பாசன நீர் விடுவிக்க வேண்டும் என பி.ஆர் பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு அரசின் சார்பில் வேளாண்மை துறை உயர் அதிகாரிகள்இ காவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகுவதை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக டெல்டா மாவட்டங்களில் இரண்டு தினங்களாக பார்வையிட்டு வருகின்றனர். தோட்டக்கலைத்துறை இயக்குனர் பிருந்தாதேவி, திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வுகளை நேரடியாக மேற்கொண்டு வருகிறார்.
அதனைத் தொடர்ந்து இன்று, கோட்டூர் ஒன்றியம் இருள்நீக்கி கிராமத்தில் ஆய்வு மேற்கொள்ள வந்த அவரை நேரில் சந்தித்த தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் பயிர்கள் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட வயல்வெளிகளில் இறங்கி ஆய்வு செய்த பின் பிஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, டெல்டா மாவட்டங்கள் முழுமையிலும் சுமார் 11 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா, தாளடி பயிர்கள் தண்ணீரின்றி கருகத் தொடங்கி இருக்கிறது. பிப்ரவரி இறுதி வரையிலும் தண்ணீர் தேவை உள்ளது. இல்லையேல் மிகப்பெரும் பேரிழப்பை சந்திக்க நேரிடும். நாளொன்றுக்கு 3/4 டிஎம்சி வீதம் பிப்ரவரி இறுதிவரை மேட்டூரில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
வேளாண்மை துறை, வருவாய் துறைளை ஒருங்கிணைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாசனத்திற்கு பயன்படுத்தும் வகையில் நீர்ப்பாசனத்தை திட்டமிட்டு ஒழுங்குபடுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு வேளாண்துறையின் வேண்டுகோளை ஏற்று நவம்பர் மாதம் முதல் சாகுபடி துவங்கிய நிலையில்,குடிநீர் என்கிற பெயரால் பாசன நீரை விடுவிக்க மறுத்து பயிர்கள் கருகுவதை தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது.
குளம், குட்டைகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் உள்ள தண்ணீரை தற்போது விவசாயிகள் பயன்படுத்தும் நிலை உள்ளது.இதனால் கோடை காலத்தில் கால்நடை மற்றும் பொதுமக்கள் தண்ணீர் இன்றி பாதிக்கும் நிலை உள்ளது. எனவே நீர் நிலைகளையும் மேட்டூர் அணை தண்ணீரை கொண்டு நிரப்புவதற்கு முன்வர வேண்டும். பவானிசாகர் அணையில் உள்ள தண்ணீரை பற்றாக்குறை காலத்தில் 8 டிஎம்சி காவிரி டெல்டா பாசனத்திற்கு பயன்படுத்திக் கொள்ள காவிரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பில் அனுமதி வழங்கி உள்ளது.
அதனை பயன்படுத்தி பிப்ரவரி இறுதி வரையிலும் பாசன நீர் விடுவிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் பெயரில் காப்பீட்டு நிறுவனங்கள் ஊழல் முறைகேடு செய்கின்றன. குறிப்பாக இழப்பீடு குறித்த பயனாளிகள் பட்டியலை அரசுக்கு தெரிவிக்கிற காப்பீட்டு நிறுவனங்கள் மத்திய மாநில அரசுகளிடம் உரிய பங்கீட்டுத் தொகையை பெற்றுக் கொள்கின்றனர்.
அதனை உரிய காலத்தில் விவசாயிகள் வங்கி கணக்கில் விடுவிப்பதில்லை. இதனை தட்டி கேட்பதற்கோ, விவசாயிகளுக்கு விளக்கமளிக்கவோ, காப்பீட்டு நிறுவனங்கள் முன் வருவதில்லை. ஒப்பந்தம் பெற்ற காப்பீட்டு நிறுவனங்கள் சார்பில் மாவட்டங்களில் பொறுப்பு மிக்க அதிகாரிகளை நியமிக்கவில்லை. இதனால் மாவட்ட ஆட்சியர்கள், வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கான விளக்கங்களை கூட தெளிவுபடுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டை உரிய காலத்தில் வழங்குவதை உறுதிபடுத்துவதை தமிழ்நாடு அரசு கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். மாவட்ட அளவில் அதற்கான ஒருங்கிணைப்பு ஏற்படுத்துவதற்கு நிர்வாக ரீதியாக முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றார்.
இந்த சந்திப்பின்போது, மாநில துணைச் செயலாளர் எம்.செந்தில்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெ.குமார், என்.சண்முகசுந்தரம், விஎஸ்.பன்னீர்செல்வம், பி.மதியழகன், டி.முத்துகிருஷ்ணன், பி.சுப்பிரமணியன், தங்கமணி உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் உடன் இருந்தனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.