திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே கரையாபாளையம் ஊராட்சியில் சிப்காட் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக நாளை 21.02 2025 நடைபெற இருந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நீதி கேட்டு நெடும் பயணம் குறித்து மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைப்பெற்றது.
இந்த பேச்சுவார்த்தை குறித்து பி.ஆர் பாண்டியன் கூறுகையில், கரையாபாளையூர் பகுதியில் சுமார் 250 குடியிருப்புகள் உட்பட 140 ஏக்கர் நிலத்தை கைப்பற்றி சிப்காட் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிராக தீவிரமான போராட்டம் துவங்கி உள்ளது. தமிழக அரசு தலித் விவசாயிகள் நிலத்தை அபகரிப்பதற்கு முயற்சிப்பதை அனுமதிக்க மாட்டோம்.
வடபாதிமங்கலம் ஆரூரான் சர்க்கரை ஆலைக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் 50 ஆண்டுகளாக தரிசு கிடக்கிறது.அதனை கைப்பற்றி சிப்காட் அமைக்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும். தருமபுரம் ஆதீனம் நிலங்களை விற்பனை செய்வதை அனுமதிக்க கூடாது என்கிற கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எடுத்துரைக்கப்பட்டது.
சிப்காட் அமைக்க எதிர்ப்புக்கான கோரிக்கைகள் குறித்து அரசுக்கு மாவட்ட ஆட்சியர் எடுத்துரைப்பதாக உறுதி அளித்தார். தருமபுரம் ஆதீனத்திற்கு செலுத்த வேண்டிய குத்தகை நிலுவைத் தொகையை செலுத்தி உரிய குத்தகைப் பதிவை சாகுபடி தாரர்களுக்கு உறுதிப்படுத்துவது அதற்கான முத்தரப்பு கூட்டத்தை நடத்தி முடிவெடுப்பது என ஆதீனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று தற்காலிகமாக நீதி கேட்கும் நெடும் பயணத்தை ஒத்தி வைப்பது என மாவட்ட ஆட்சியர் முன் உறுதி செய்யப்பட்டது.
மேலும், இங்கு சிப்காட் அமைக்க கூடாது என கிராம சபை கூட்டங்களில் தீர்மாணம் நிறைவேற்றப்பட்டுள்ளது.முன்னதாக திருவாரூர் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவுகள் எடுக்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் இறுதி செய்யப்பட்டு கையொப்பமிடப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சரவணன்,மாவட்ட பொருளாளர் நன்னிலம் நடராஜன். கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் சரவணன்,நன்னிலம் ஒன்றிய செயலாளர் அண்ணாத்துரை, போராட்டக் குழு சார்பில் சிவராமன் உள்ளிட்ட அனைத்துக் கட்சி குழுவினர் பங்கேற்றனர்.
க.சண்முகவடிவேல்