ஐக்கிய விவசாயிகள் சங்கம் அரசியல் சார்பற்ற SKM (NP)சார்பில் நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பேரணி ஆர்ப்பாட்டம், இன்று நடைபெற்று வருகிறது. இதில் தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் பி.ஆர் பாண்டியன் தலைமையேற்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் திருப்பதி வாண்டையார், தஞ்சை மண்டல தலைவர் துரை பாஸ்கரன், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பத்மநாபன், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார், தெற்கு மாவட்ட தலைவர் ஊரணிபுரம் ரவிச்சந்திரன்,மாநில இளைஞரணி அமைப்பாளர் ஒக்கநாடு மகேஸ்வரன். மாநகர பொருப்பாளர் வினோத் பாரதி. உள்ளிட்டோர் முன்னிலை வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, பிஆர் பாண்டியன் கூறுகையில்,
மத்தியில் ஆளக்கூடிய மோடி அரசு தொடர்ந்து விவசாயிகளுக்கு விரோதமான கொள்கையை கையாண்டு வருகிறது. பாராளுமன்றத்துக்குள் நுழைய விவசாயிகளுக்கு தடை விதிக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விவசாயிகளை பாராளுமன்றத்தில் அழைத்து கோரிக்கையை கேட்டறிந்து பாராளுமன்றத்தில் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டத்திற்கு குரல் கொடுத்தார்.
உச்சநீதிமன்றம் விவசாயிகள் பேரணியை தடுப்பது நியாயம் இல்லை. விவசாயிகள் கோரிக்கை நியாயமானது. அது குறித்து தீர்வு காணுவதற்கு உயர்மட்ட குழுவை உடனடியாக அமைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. அதனை ஏற்று உடனடியாக மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டத்தை கொண்டு வந்து விவசாயிகளை பாதுகாக்க முன்வர வேண்டும்.
திருச்சியில் அய்யாக்கண்ணு போராடுவதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது ஏற்க முடியாது. போராட்டத்தில் அவர் பங்கேற்பது அவசியமாகிறது. காவல்துறை அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“