டெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக SKM (NP) அமைப்பின் சார்பில் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் காவிரி டெல்டா விவசாயிகள் பங்கேற்ற ரயில் மறியல் போராட்டம் இன்று நடைபெற்றது. போராட்டத்திற்கு தமிழக தலைவர் பி.அய்யாக்கண்ணு, மாநில ஒருங்கிணைப்பாளர் பி ஆர் பாண்டியன் தலைமையேற்றனர். 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர்.
இந்த ரயில் மறியல் போராட்டத்தின் போது பிஆர்.பாண்டியன் விவசாயிகளிடம் போராட்டத்தின் நோக்கம் குறித்து பேசியபோது, டெல்லியில் விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம், எம்.எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும். மாநில அரசுகள் வழங்கும் இலவச மின்சாரத்தை தடை செய்யும மின்சார ஒழுங்குமுறை சட்ட மசோதாவை திரும்ப பெற விவசாயின் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பிப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13 ஆம் தேதி முதல் டெல்லி நகரத்தை முற்றுகையிட்டு அரியானா, பஞ்சாப், உத்தர பிரதேச மாநில எல்லைகளில் விவசாயிகள் போராடி வருகின்றனர்.
பிரதமர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்கிற அடிப்படையில் நடைபெறும் போராட்டத்தை தீர்வு காண வேண்டிய பிரதமர் மோடி காவல்துறை, ராணுவத்தை கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தி ரசாயன குண்டுகள் பொழிந்து விவசாயிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். பலருக்கு ரப்பர் குண்டு பட்டு மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்றனர்.
உக்ரைன், காசா போருக்கு இணையான வகையில் விவசாயிகள் மீது மத்திய அரசு தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது.விவசாயி இதனை எதிர்கொண்டு போராட்டத்தை தீவிரப் படுத்தி வருவதால் 15க்கு மேற்பட்ட சாலையில் முற்றுகையிடப்பட்டுள்ளதால் டெல்லி மாநகரம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. நாளை விவசாயிகளுக்கு நம்பத் தகுந்த வகையில் மத்திய அரசு தீர்வு காணும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் திமுக அரசு மத்திய அரசு நிதி ஒதுக்குவதில்லை என காரணம் காட்டுகிறது. டெல்லி போராட்டத்திற்கு முதலமைச்சர் இதுவரையில் கண்டனம் தெரிவிக்கவில்லை. மத்திய அரசுக்கு எதிரான ரயில் மறியல் போராட்டத்தில் காவல்துறையை குவித்து விவசாயிகளை தடுத்து நிறுத்துவது ஏன்? மத்திய அரசும், மாநில அரசும் கூட்டு சேர்ந்து தமிழ்நாடு விவசாயிகளை ஒடுக்க நினைக்கிற நடவடிக்கையை முதலமைச்சர் கைவிட வேண்டும் என எச்சரிக்கிறேன் என்றார்.
போராட்டத்தில் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் சுந்தரவிமலநாதன், எம் பழனியப்பன், எம் மணி.வி எஸ் வீரப்பன்,காவலூர் செந்தில்குமார், பாட்ஷா ரவி, பு.காமராஜ், அறிவு, புதுக்கோட்டை பத்மநாபன்.திருப்பதி வாண்டையார், செய்தி தொடர்பாளர் மணிமாறன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் முன்னணி தலைவர்கள் பங்கேற்றனர். இந்த ரயில் மறியல் போராட்டத்தில் தஞ்சை ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“