தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மன்னார்குடி இந்தியன் வங்கி முன் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் பங்கேற்ற பி.ஆர் பாண்டியன் டிசம்பர் 14 தமிழகம் தழுவிய ரயில் மறியல் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறிதது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவிலேயே முதன் முதலாக விவசாயிகள் சொத்துக்களை சர்பாசி சட்டம் மூலம் விற்பனை மற்றும் கண்காட்சி இன்றும், நாளையும் திருச்சியில் நடத்துவதற்கு இந்தியன் வங்கி ஏற்பாடு செய்துள்ளது. இதனை கண்டித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் இந்தியன் வங்கி முன் முற்றுகை போராட்டத்தை நடத்தி உள்ளோம்.
திருச்சி மாவட்ட ஆட்சியரோடு தொடர்பு கொண்டு மாவட்ட நிர்வாகம் அனுமதியில்லாமல் நடத்தப்படுகிற கண்காட்சியை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். விவசாயிகள் சொத்துக்கள் அபகரிப்பதை தமிழ்நாடு அரசு அனுமதிக்க கூடாது. மத்திய அரசு சர்பாசி சட்டத்தை திரும்ப பெற வேண்டும். கடன் முழுமையும் தள்ளுபடி செய்ய வேண்டும். வங்கிகள் கடன் வசூல் என்கிற பெயரில் அதானியும் அம்பானியும் விவசாயிகள் சொத்துக்களை அபகரிப்பதற்கு அனுமதிக்க கூடாது.
இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தை அமைதி வழியில் நடத்துகிறோம். தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ளது. அதே நேரத்தில் திருச்சியில் நடைபெறுகிற கண்காட்சி நிறுத்தப்பட்டு விவசாயிகள் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கான உரிய நடவடிக்கையை தமிழ்நாடு அரசு அவசரகால நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டும்.மத்திய அரசு கடன் முழுமையும் தள்ளுபடி செய்து விவசாயிகளை தற்கொலை நிலையிலிருந்து பாதுகாக்க முன்வர வேண்டும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.
இதனை வலியுறுத்தி கடந்த 26 ஆம் தேதி முதல் பஞ்சாப் மாநிலம் கண்ணூரி பார்டரில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அரசியல் சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஜெகஜீத் சிங் டல்லேவாள் அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் டிசம்பர் 14ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் தமிழ்நாடு எஸ் கே எம் (NP) சார்பில் நடத்த உள்ளோம். இப்போராட்டத்தில் பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்க உள்ளனர் என்று கூறியுள்ளார்.
போராட்டத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் திருப்பதி வாண்டையார், தஞ்சாவூர் மண்டல தலைவர் துரை பாஸ்கரன், மாநில இளைஞரணி செயலாளர் ஒக்கநாடு மகேஸ்வரன், மாநில துணைச் செயலாளர் எம் செந்தில் குமார், திருவாரூர் மாவட்ட செயலாளர் குடவாசல் சரவணன், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் பிரபாகரன், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பத்மநாபன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“