டெல்டாவில் ரூ.90 கோடி ஒதுக்கீட்டில் 6% அளவில் மட்டுமே தூர்வார முடியும். தேவையான நிதியை ஒதுக்கி முழுமையும் தூர்வாருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் கோட்டூர், திருத்துறைப்பூண்டி ஒன்றிய பகுதிகளில் புழுதுக்குடி, சிதம்பரக் கோட்டம், எழிலூர் பகுதிகளில் பாசன ஆறுகள் மற்றும் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்ட பின்னர் எழிலூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் கூறுகையில்,
காவிரி டெல்டாவில் ரூபாய் 90 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து ஏப்ரல் மாதமே பணிகளை துவங்கி முடித்துள்ளதையும். அதனை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதையும் வரவேற்கிறேன். அதே நேரத்தில் ரூ.90 கோடி ரூபாய் செலவில் தூர் வருவதால் தேவையில் ஏழு சதவீதம் அளவில் மட்டுமே தூர்வார முடியும்.
நெடுஞ்சாலைத்துறையில் நபார்டு திட்டத்தில் சாலை அமைப்பதற்கு ஒரு கிலோ மீட்டருக்கு ௹.8 கோடி வரையிலும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் திருவாரூர் மாவட்டத்திற்கு தூர் வருவதற்கு ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்வது எந்த விதத்தில் நியாயம்? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும். குறிப்பாக பாமணி ஆறு, கோரையாறு சாலுவானார் உள்ளிட்ட பல்வேறு ஆறுகள் தூர்வாரப்படாமல் புதர்மண்டி பாசன வடிகால்கள் முழுமையும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் தஞ்சாவூர் அருகே முதலைமுத்துவாரியை பார்வையிட்டுள்ளார். இதன் மூலம் திருச்சி தஞ்சாவூர் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த வெள்ள நீர் முழுமையும் மன்னார்குடி கோட்டூர், முத்துப்பேட்டை ஒன்றிய பகுதிகள் வழியே கோரையாறு மூலம் கடலில் வெளியேற்றப்பட வேண்டும்.
ஆனால், கோரையாறு இரு கரைகளுக்கு சமமான அளவில் ஆறு புதர் மண்டி கோரையாறு தனது அடையாளத்தை இழந்துள்ளது. இதனால் எதிர்காலத்தில் பாசன,வடிகால்கள் மிகப்பெரும் பாதிப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் தூர் வாருகிற பணிகளை அதிகாரிகளால் அழகு படுத்தப்பட்ட இடங்களில் பார்வையிடுவது ஒரு புறம் இருந்தாலும், பாதிக்கப்பட்டுள்ள கோரையாறு, பாமனி போன்ற ஆறுகளை நேரடியாக பார்வையிட வேண்டும்.
ஆசிய வளர்ச்சி வங்கி திட்டத்தில் இந்த நதிகளை மறுசீரமைக்க இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மதிப்பீடுகள் அனுப்பப்பட்டுள்ளது. உடனடியாக நிதி பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.சாலுவனாறு காவிரி டெல்டாவின் கடமடை பகுதியில் ஒடக்கூடிய பாசன மற்றும் வடிகால் ஆறாகும்.
எழிலூர் முதல் திருத்துறைப்பூண்டி நகரத்தை ஒட்டிய பகுதி வரையிலும் தூர்வாரி கரைகளை பலப்படுத்தி கதவனை அமைத்து கோடைகாலத்தில் தண்ணீரை தேக்கி நிலத்தடி நீரை பராமரிக்க முடியும். இதன் மூலம் அப்பகுதி மக்கள். விவசாயிகள் பயன்பெறுவார்கள். அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் செய்திட தமிழக முதலமைச்சர் முன்வர வேண்டும் என்றார்.
முன்னதாக இருள்நீக்கி, புழுதுக்குடி, சிதம்பரம் கோட்டகம் பகுதிகளில் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த திருவாரூர் வெண்ணாறு கோட்ட செயற்பொறியாளர் எம் ஜி ராஜேந்திரன் என்பவரை பிஆர் பாண்டியன் சந்தித்து, விடுபட்ட வடிகால்களை தூர் வாருவதற்கு நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்வில், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் திருத்துறைப்பூண்டி ஒன்றிய தலைவர் வரம்பியம் அருள், முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர் மாங்குடி சரவணன், புழுதுக்குடி இளங்கோவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“