கடன் வசூல் என்ற பெயரில் விவசாயிகள் தற்கொலைகள் தொடர்ந்து வரும் நிலையில், ஜெகதீசன் மரணத்திற்கு கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர். . பாண்டியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள நெமிலி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஜெகதீசன். நெம்மேலி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக 2025 வரை செயல்பட்டவர். தனக்கு புதிய வீடு கட்டுவதற்காக 20 லட்சம் ரூபாய் ஈக்விட்டாஸ் வங்கியில் கடன் பெற்றதாகவும் 24 தவணையில் செலுத்த ஒப்புதல் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது . 22 தவணைகள் தவறாமல் செலுத்தி வந்ததாகவும், இரு தவணைகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் நேற்று இவரது வீட்டிற்கு வசூலுக்கு சென்ற இரு வங்கி அதிகாரிகள் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி உள்ளனர். ஊராட்சி மன்ற தலைவராகவும், கிராமத்தில் கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்த இவரை அவமானப்படுத்தியதை ஏற்க மனமின்றி ஜெகதீசன் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
வங்கி துவக்கப்பட்டு குறுகிய காலத்தில் கடன் வசூல் என்ற பெயரில் விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டுவதை அனுமதிக்க முடியாது. இரண்டு மாதங்களுக்கு முன்னதாக சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கிறார். இந் நிலையில் தொடர்ந்து ஜெகதீசன் தற்கொலை செய்துள்ளதற்கு வங்கி முழு பொறுப்பேற்க வேண்டும்.அவரது குடும்பத்தை பாதுகாக்க ஒரு கோடி நிதி உதவி வழங்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு வங்கிகள் கடன் வசூல் நடவடிக்கைகள் குறித்து உரிய அவசர சட்டம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து வசூல் என்கிற பெயரில் குண்டர்கள் மூலம் மிரட்டுவது, அவமானப்படுத்துவது தொடர்வது வேதனை அளிக்கிறது. புதிய அவசர சட்டத்தின் அடிப்படையில் ஈக்விடாஸ் வங்கி நிர்வாகத்தின் மீது உரிய கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழக அரசு சட்டத்தை நிறைவேற்றி அறிவித்துவிட்டு குற்றத்திற்கு துணை போகக்கூடாது. மறுக்கும் பட்சத்தில் நீதி கேட்டு மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றார்.
க.சண்முகவடிவேல்