தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் திருவாரூர் மாவட்டம் குடவாசல் நகரத்தில் நீர் பாசனத்துறை மூலம் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டார். ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாருவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை கொண்டு பணிகள் நடைபெற்று வருகிறது. சில இடங்களில் பணிகள் மந்தகதியில் நடைபெறுகிறது.
மதிப்பீட்டின் அடிப்படையில் 100% பணிகளை நிறைவேற்ற வேண்டும். இதனை கண்காணிக்க மாவட்டம் தோறும் நியமிக்கப்பட்டுள்ள உயர் அதிகாரிகள் கொண்ட கண்காணிப்பு அலுவலர்கள் மே இறுதிக்குள்ளாக தூர் வாரும் பணிகள் முழுமையும் முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தூர்வாரும் பணிகளை தலைப்பு முதல் கடைமடை வரையிலும் முழுமையாக முடிக்கப்பட வேண்டும். நகரப் பகுதிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.
குறிப்பாக குடவாசல் நகரத்தில் கழிவுநீர் முழுமையும் குடவாசல் பகுதியை ஒட்டி இருக்கிற கிராமங்களுக்கு செல்லக்கூடிய பாசன வாய்க்காலில் கலக்க செய்யப்படுகிறது. இதனால் பாசன நீர் மாசடைந்து வருகிறது. இதை தடுப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குடவாசலில் நகரம் வழியே ஓடக்கூடிய பாசன வாய்க்கால்கள் முழுமையும் தூர்வாரி நீர்ப்பாசனத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
குருவை சாகுபடி துவங்குவதற்கு குறுகிய கால நெல் விதைகள் விவசாயிகள் விரும்பும் வகையில் விதைகளை விற்பனை செய்ய முன்வர வேண்டும். ஒரு சில விதைகள் மட்டுமே வேளாண்துறை விற்பனை செய்து வருவதை ஏற்க இயலாது. தனியார் கடைகளில் விற்பனை செய்யக்கூடிய விதைகள் குறித்து தரத்தினை ஆய்வு செய்து கண்டிப்புடன் தரமான விதைகள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
அதற்கான கண்காணிப்புக்குழுக்களை மாவட்ட ஒன்றிய அளவில் ஏற்படுத்த வேண்டும். தரமான விதைகள் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும்.தரமற்ற விதைகளை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், மானிய திட்டங்கள் நேரில் விவசாயிகள சென்றடைவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கூட்டுறவு கடன் உரிய நேரத்தில் கிடைப்பதற்கு அவசர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மின்சாரத்துறையில் முன்னாள் ராணுவ வீரர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழுவினர் கிராமப் பகுதியில் விவசாயிகளை மிரட்டி பணம் பறிப்பதற்கு பல இடங்களில் முயற்சி செய்கிறார்கள். குறிப்பாக காவிரி டெல்டாவில் மின் திருட்டில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு கிடையாது. முற்றிலும் விவசாயத்திற்கு மட்டுமே மின்சார இணைப்பு பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் உண்மைக்கு புறம்பாக மிரட்டல் விடுவது தொடர்கிறது. இதனை உரிய முறையில் கண்காணித்து விவசாயிகளுக்கும் மின்வாரியத்திற்கும் முரண்பாடுகளை உருவாக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களுக்கான வட்டியை செலுத்தி புதுப்பித்துக் கொள்வதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
திருவாரூர் மாவட்ட செயலாளர் ஜி குருசாமி, உயர்மட்ட குழு உறுப்பினர் வி சாமிநாதன், குடவாசல் ஒன்றிய செயலாளர் வி நாகராஜன், கொரடாச்சேரி ஒன்றிய தலைவர் என் சரவணன், நரசிங்கம்பேட்டை, வி சக்திவேல், ஆர் ராஜேந்திரன் கரையா பாலூர் ஐயப்பன், பாண்டியன் குடவாசல் இளைஞரணி ஒன்றிய தலைவர் என் கலைமணி, துணைச் செயலாளர்முகிலன், முன்னாள் குடவாசல் பேரூராட்சி வார்டு உறுப்பினர் காளிதாஸ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
க. சண்முகவடிவேல்