நகைக்கடன் நிபந்தனையின்றி வழங்கிடவும், பருத்தி, எள்ளுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வலியுறுத்தியும், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஜுன் 3ல் முற்றுகை பேராட்டம் நடத்த உள்ளதாக பி.ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்டநிர்வாகிகள் கூட்டம் மன்னார்குடியில் மாவட்டத் துணைத் தலைவர் எம்.கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், தமிழ்நாடு முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் தமிழக அரசு கொள்முதல் செய்திட வேண்டும். நடப்பாண்டு கொள்முதல் செய்த நெல்லுக்கு உடனடியாக உரிய கிரயத் தொகையை தமிழ்நாடு அரசு பொறுப்பேற்று வழங்கிட வேண்டும்.
கொள்முதலில் தனியார் அனுமதியை கைவிட வேண்டும், இதனை மறுக்கும் பட்சத்தில் தமிழக அரசுக்கு எதிரான போராட்டத்தை தமிழக முழுமையிலும் தீவிர படுத்துவோம். காவிரி டெல்டா மாவட்டங்களில் தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று மாற்று பயிர் சாகுபடி திட்டத்தின் அடிப்படையில் எள், பருத்தி உள்ளிட்ட கோடை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன. வரலாறு காணாத பேரழிவு கோடை மழையால் முற்றிலும் அழிந்து போய்விட்டது. இதற்கு தமிழக அரசு பொறுப்பேற்று பேரிடர் மேலாண்மை திட்டத்தில் உரிய இடுபொருள் இழப்பீடு வழங்கிட வேண்டும்.
காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும். தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களை பின்பற்றி ஏக்கர் 1க்கு 15 ஆயிரம் ரூபாய் ஊக்க நிதியாக முழு மானியத்தில் ஆண்டுதோறும் சாகுபடி துவங்க முன் வழங்கிட தமிழக அரசு முன் வர வேண்டும். குருவைத் தொகுப்பு திட்டம் சாகுபடியில் ஈடுபடும் அனைவருக்கும் பாகுபாடு இன்றி வழங்கிட வேண்டும்.நெல் குவிண்டால் 1க்கு ரூ3500 ம், கரும்பு டன் 1 க்கு 5ஆயிரம் விலை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும்.
மத்திய அரசு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் நகை கடன் பெற வேண்டுமானால் கடைகளில் நகை வாங்கியதற்கான ரசீதுக்கான அத்தாட்சி வழங்கப்பட வேண்டும். நகையின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே கடன் கொடுக்க இயலும் என்கிற நிபந்தனைகள் ஏற்க இயலாது. நிபந்தனைகளை கைவிட்டு நகை கடன் பெறுவதற்கான நடைமுறையை இலகுவாக்கி அமல்படுத்த வேண்டும்.
மேலும் கடன் பெற்று சாகுபடி செய்யும் விவசாயிகள் காலநிலை மாற்றத்தால் பேரழிவை சந்திப்பதால் ஆண்டுதோறும் கடன் தொகையை முழுமையும் வட்டியுடன் திரும்பி செலுத்தி மறு கடன் பெற முடியாத நிலை உள்ளது.
எனவே கடந்த கால நடைமுறைகளை பின்பற்றி வட்டி மட்டும் செலுத்தி கடனை ஆண்டுதோறும் புதுப்பித்துக் கொள்வதற்கு ரிசர்வ் வங்கி மூலம் உரிய அனுமதிகளை மத்திய அரசு பெற்று தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூன் 3ஆம் தேதி காலை 10 மணிக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இந்த போராட்டத்தில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்க உள்ளனர் முன்னதாக விளமல் பாலத்திலிருந்து விவசாயிகள் பேரணி புறப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிடப்படும் என்றார்.
க.சண்முகவடிவேல்