/indian-express-tamil/media/media_files/2025/03/08/tNx06NOIve1Zznw3YDzI.jpg)
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் மன்னார்குடியில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,காவிரி டெல்டா உள்ளிட்ட தமிழ்நாடு முழுமையிலும் கோடை மழை பேரழிவு பெருமழையாக பெய்து வருகிறது. இதனால் கோடை சாகுபடி பயிர்களான பருத்தி,எள், உளுந்து உள்ளிட்ட பயிர்கள் அழிந்துவிட்டன. பல்வேறு மாவட்டங்களில் நெல் சாகுபடி செய்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் அழிந்துவிட்டது.
வாழை மரங்கள் சாய்ந்து அழிந்து வருகிறது.காலநிலை மாற்றத்தால் பேரழிவை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். எனவே, தமிழ்நாடு அரசு காப்பீட்டு திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்.தனிநபர் காப்பீடு திட்டத்தை கொண்டு வர வேண்டும். தமிழ்நாட்டுக் கென தனி காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசே செயல்படுத்த வேண்டும். மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்படுவது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் தூர் வாரும் பணிகளை விரைவுபடுத்தி முடிக்க வேண்டும்.
குருவைக்கு தேவையான குறுகிய கால நெல் விதைகள் தரமான வகையில் குறைந்த விலையில் கிடைப்பதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான கூட்டுறவு கடன் வழங்குவதற்கு முன்வர வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, மாநிலங்களில் சாகுபடி துவங்குவதற்கு ஆண்டுதோறும் ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 15.000 ம் ஊக்க நிதியாக வழங்கி விவசாயிகளை ஊக்கப்படுத்தி வருகின்றார்கள். அதனை பின்பற்றி வரும் குருவை சாகுபடி முதல் தமிழ்நாட்டிலும் ரூபாய் 15 ஆயிரம் வழங்கி விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும்.
குருவை தொகுப்பு திட்டம் சாகுபடி துவங்குவதற்கு முன்னரே வழங்கப்பட வேண்டும். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.அவர் தமிழ்நாட்டில் கனிமவள கொள்ளைக்கு எதிராக சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை துணிவுடன் மேற்கொண்டதால் அவருக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் உள்ளது. பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை அவர் தவிர்த்து வருகிறார். நீதிமன்றத்திற்கு கூட செல்ல முடியாமல் பாதுகாப்பற்ற நிலை தொடர்வதாக வேதனையை வெளிப்படுத்தி உள்ளார். எனவே, உடனடியாக அவருக்கு உரிய காவல் துறை பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.
திமுக தனது 2021 தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் நீட் தேர்வை ரத்து செய்திருக்க வேண்டும். வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு, மத்திய அரசை காரணம் காட்டி நீட் தேர்வுக்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்கி உள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழ்நாடு கலாச்சார பண்பாட்டுக்கு எதிராக தாலியை கழட்டி வைப்பதும், மூக்குத்தி, மோதிரங்களை அகற்றுவதும் மனிதநேயமற்ற செயலாக உள்ளது. தேர்வு முறைகளில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும், பரிசோதனைகளை நடத்துவதும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையும், அதிகாரிகளும் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் மத்திய அரசை காரணம் காட்டி தமிழ்நாடு அரசு தப்பித்துக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டு கலாச்சார பண்பாட்டுக்கு எதிராக தேர்வு முறை என்ற பேரில் நிகழ்த்தப்படும் சமூக அநீதிகளை தடுத்து நிறுத்துவதற்கு தமிழக அரசு உரிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்.
தமிழ் இன பண்பாடு, கலாச்சாரத்திற்கு எதிரான பரிசோதனைகளை தவிர்ப்பதற்கு மத்திய அரசுக்கு எடுத்துரைத்து தீர்வு காண முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றார்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.