Farmers Protest : தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் காவிரி டெல்டாவில் கருகும் பயிரை காப்பாற்றவும், சம்பா சாகுபடியை தொடங்கிடவும், ஆணையத்தின் உத்தரவை ஏற்று மத்திய அரசு கர்நாடகாவிடம் நீரை பெற்று தர வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டம் நடந்தது.
தஞ்சையை அடுத்த திருவாரூர் ரயில் மறியல் போராட்டத்தில் பொதுச் செயலாளர் பி ஆர் பாண்டியன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
மன்னார்குடியில் இருந்து திருவாரூர் வழியாக மயிலாடுதுறை செல்லும் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 200க்கும் மேற்பட்ட போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரமேஷ்குமார் தலைமையில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.சுமார் ஒரு மணி நேரம் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டு திருவாரூர் வர்த்தக சங்க மண்டபத்தில் வைக்கப்பட்டு மாலை 7 மணி அளவில் விடுவிக்கப்பட்டனர்.
இதனால் காவிரி டெல்டாவில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. அப்போது பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களிடம், “தமிழ்நாட்டில் காவிரி டெல்டாவில் 3.50 லட்சம் ஏக்கர் குருவை கருகத் தொடங்கி விட்டன. 15 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபாடி தொடங்க முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.
காவிரி ஆணையம உத்தரவை ஏற்க மறுத்து கர்நாடகம் போராட்டத்தில் மத்திய அரசு அரசியல் லாப நோக்கத்தோடு கர்நாடகாவிற்கு மறைமுகமாக துணை போகிறது.
தமிழ்நாட்டில் கருகும் பயிரை காப்பாற்ற ஆணையத்தின் உத்தரவை ஏற்று செயல்படுத்த வேண்டிய மத்திய அரசு மவுனம் காத்து வருவது தமிழக விவசாயிகளுக்கு செய்யும் துரோகமாகும்.
இதனை கண்டித்தும் 1 மத்திய அரசு உடனடியாக ஆணைய உத்தரவின் அடிப்படையில் தண்ணீரை பெற்று தர வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறோம்.
மேகதாது அணைக்கட்ட கர்நாடகா சட்ட விரோதமான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது இதனை சட்டவிரோதமானது என மத்திய அரசு அறிவிக்க முன்வர வேண்டும்.
ராசிமணலில் தமிழ்நாடு அணை கட்டிக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும். கருகும் குருவை பயிருக்கு இழப்பீடாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் வழங்கிட வேண்டும். மனமுடைந்து சம்பா சாகுபடி பணியை துவக்க முடியாமல் பரிதவிக்கும் விவசாயிகளுக்கு சாகுபடியை துவங்கிட ஊக்க நிதியாக ஏக்கர் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கிட மத்திய மாநில அரசுகள் முன் வரவேண்டும்.
கடந்த காலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட போது முன்னாள் முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கி இருப்பதை தமிழ்நாடு அரசு நினைவில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இது மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கான வகையில நடைபெறுகின்ற முதற்கட்ட போராட்டம்.
மத்திய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படுமேயானால் போராட்டத்தை தீவிரமாக்குவோம் என எச்சரிக்கிறேன் என்றார்.
போராட்டத்தில் மாநில கவுரவ தலைவர் நீலன் அசோகன், துணை தலைவர்கள் கிருஷ்ணமணி, துணைச் செயலாளர் எம் செந்தில்குமார், மாவட்டத் தலைவர் எம் சுப்பையன், மாவட்ட செயலாளர் சரவணன், பொருளாளர் நடராஜன், மாவட்ட கவுரவ தலைவர் விளக்குடி செல்வராஜ், உயர் மட்டக்குழு உறுப்பினர்கள் துரைராஜ்,குடவாசல் அசோகன், கோட்டூர் அசோகன், மாவட்ட துணை தலைவர்
எம் கோவிந்தராஜ், துணை செயலாளர் முகேஷ், திருவாரூர் ஒன்றிய தலைவர் அறிவு முத்துப்பேட்டை ஒன்றிய தலைவர் சரவணன், திருத்துறைப்பூண்டு ஒன்றிய தலைவர் வரம்பியம் அருள். ஒன்றிய செயலாளர் விபி.பாலமுருகன், நன்னிலம் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, குடவாசல் ஒன்றிய செயலாளர் நாகராஜன், தலைவர் மோகன்,
கோட்டூர் தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.தெய்வமணி வடக்கு ஒன்றிய தலைவர் எஸ் வி கே சேகர்,செயலாளர் ராவணன், கொரடாச்சேரி ஒன்றிய தலைவர் சரவணன,நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், வடுவூர் மைய செயலாளர் செல்வதுரை, வலங்கைமான் ஒன்றிய தலைவர் ஆனந்த், செயலாளர் சிவா, அண்ணாதுரை, மன்னார்குடி நகர தலைவர் தங்கமணி, செயலாளர் போஸ் உள்ளிட்ட நூற்றுக்கும மேற்பட்ட பெண்கள் உட்பட 500க்கும மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“