கோவை மாவட்டத்தில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட பணிகளை தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.
01.01.2023"ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் 09.11.2022 முதல் 08.12.2022 வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கல் மற்றும் திருத்தத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
இதில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் மற்றும் நீக்கம் செய்யப்பட்ட பெயர்களின் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டார். இந்த இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 14,98,721 பேரும் பெண் வாக்காளர்கள் 15,51,421 பேரும் இதரர் 558 பேரும் என மொத்தம் 30,50,700 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் 18,426 இளம் வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கல் மற்றும் திருத்தத்திற்கான தொடர் திருத்த பணிகள் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களிலும் மேற்கொள்ளப்படும் எனவும் இணையதளம் மூலமாகவும் மனுக்கள் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக www.nvsp.in என்னும் இணைய முகவரியின் வாயிலாகவோ அல்லது Voter Helpline App எனும் ஆண்ட்ராய்டு செயலி மூலமாகவோ பொதுமக்கள் அவர்களது விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.ரஹ்மான் கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/