43 ஆவது சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டத்தில் கூறிய கருத்துக்கள் குறித்து, கோவா போக்குவரத்து அமைச்சர் மவுவின் கோடின்ஹோவின் கோரிக்கையின் பேரில் கோவா மக்களிடம் மன்னிப்பு கேட்க தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மறுத்துவிட்டார்.
43 ஆவது சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கொரோனா தொடர்பான பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை வைத்தன. இதில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனும், கொரோனா தொடர்பான மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளுக்கு ஜி.எஸ்.டி.யை 5% முதல் 0% வரை குறைப்பதற்கு வலியுறுத்தினார்.
ஆனால் கூட்டத்தில் கலந்துக் கொண்ட பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கொரோனா தொடர்பான பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் கோவாவைச் சேர்ந்த அமைச்சர் மவுவின் கோடின்ஹோவும் ஒருவர்.
கோவா அமைச்சர் கோடின்ஹோ தமிழக நிதி அமைச்சர் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் போது தமிழக நிதியமைச்சர் தன்னை வாயை மூடு என்று கூறியதாகவும், கோவா ஒரு சிறிய மாநிலம் என்று கூறி அவமதித்ததாகவும், எனவே ஒரு சிறிய வாக்கு இருக்க வேண்டும், என்றும் கூறியதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள பழனிவேல் தியாகராஜன், இவை ஆதாரமற்ற பொய்கள் என்றும் செஸ் வரி தொடர்பாக கோவாவிற்கு எந்தவொரு அஜெண்டாவும் இல்லை, எனவே அவர் வாக்களித்திருக்க முடியாது என்றும் கூறினார்.
மேலும், குறைகுடம்தான் கூத்தாடும். 8 கோடி மக்கள் வசிக்கும் தமிழகத்தின் நிதி அமைச்சராக நான் என் மாநிலத்தில் பல பொறுப்புகளை கவனித்து வருகிறேன். தமிழக மக்களுக்காக நான் பல பொறுப்புகளை கவனித்துக் கொள்கிறேன், பட்ஜெட் தாக்கல் செய்கிறேன். எனவே, தேவையில்லாத குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லி நான் நேரத்தை வீணாக்க மாட்டேன்.
ஆனால் இப்போது கோவாவின் போக்குவரத்து துறை அமைச்சர், நான் கோவா மக்களை அவமானப்படுத்தியாக வைக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கும் பதிலடி கொடுக்க விரும்புகிறேன். அதோடு இது போன்ற நபர்களால் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன்.
நான் ஜிஎஸ்டி கூட்டத்தில் இரண்டு முக்கியமான கோரிக்கைகளை வைத்தேன், முதல் விஷயம், ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு என்பது தவறு. மக்கள் தொகை அடிப்படையில் மாநிலங்களுக்கு வாக்குகளை கொடுக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் தொடங்கி நாடாளுமன்றம் வரை மக்கள் தொகை அடிப்படையிலேயே பிரநிதித்துவம் வழங்கப்படுகிறது. ஜிஎஸ்டி கவுன்சிலிலும் அதேபோல் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டேன்.
அதோடு சுய மரியாதை, சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையில், மாநில உரிமைகளை நிலைநாட்டும் வகையில் பேசினேன். திராவிட கொள்கையான அதிகார பரவல் குறித்தும், சுயாட்சி குறித்தும், ஒன்றியத்தில் இருந்து உரிமைகளை பரவலாக்கி மாநிலங்களின் அனைத்து மூலைக்கும் கொண்டு செல்வது குறித்து பேசினேன்.
அதேபோல் கொரோனா தடுப்பு பணிக்காக ஸ்பெஷல் செஸ் வரி என்ற சிக்கிம் போன்ற மாநிலங்களின் கோரிக்கைக்கு ஆதரவாகவே பேசினேன். அதோடு இன்னொரு விஷயத்தையும் குறிப்பிடுகிறேன், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கொரோனா மருந்து பொருட்களின் இறக்குமதி மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க கோவா அமைச்சர் மவ்வின் கோடின்ஹோ மீண்டும் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தார். மனித நேய அடிப்படையில் வரியை குறைக்க வேண்டும் என்ற போது அதை அவர் ஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்து வாக்களித்தார்.
அதேபோல் கூட்டத்தில் ஒரே விஷயங்களையே மீண்டும் மீண்டும் அவர் பேசினார். அவரின் பேச்சு வெறுமையாக இருந்தது மற்றவர்களை குறுக்கிடும் விதமாக இருந்தது. 20 கோடி மக்கள் தொகை உள்ள உத்தர பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் எடுத்து கோவா அமைச்சர் பேசினார். இது இந்திய ஜனநாயகத்திற்கு சரியானதா என்று மக்களே முடிவு செய்யட்டும்.
நான் கோவா மக்களிடம் எந்த பொழுதிலும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் கிடையாது. நான் அவர்களுக்கு எதிராக எதுவும் பேசவில்லை. அதே சமயம் உங்களின் மாநில உரிமைக்காக நான்தான் பேசினேன். அவர்களின் உரிமைக்காகவே பேசினேன். அதற்கான நன்றியை நான் எதிர்பார்க்கவில்லை. . மாநில உரிமைகளை நிலைநாட்டுவதுதான் என் குறிக்கோள். அதே சமயம் கோவா மக்களுக்கு என் அனுதாபத்தை தெரிவிக்கிறேன்.
இப்படி ஒரு நபர் உங்களுக்கு அமைச்சராக கிடைத்ததற்கு அனுதாபத்தை தெரிவிக்கிறேன். அதோடு பாஜகவிற்கு ஒரு அறிவுரை வழங்கவும் விரும்புகிறேன். அடுத்த முறை பிற கட்சியில் இருந்து எம்எல்ஏக்களை உங்கள் கட்சிக்கு இழுக்கும் போது கொஞ்சம் தகுதியான நபர்களை கட்சிக்குள் இழுக்க வேண்டும் என்று கேட்கிறேன். அப்படி செய்திருந்தால் கோவாவும் மொத்த நாடும் கொஞ்சம் பலன் அடைந்திருக்கும், என்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அதிரடியாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்த முந்தைய ட்வீட்டில் கோடின்ஹோ தனது செய்தியாளர் சந்திப்பில் பொய் கூறிவிட்டதாக குறிப்பிட்டார். 17 வருடம் காங்கிரசில் இருந்து பின் பாஜகவிற்கு தாவிய இவர் அபாண்டமாக பொய் சொல்கிறார், என்று கடுமையான விமர்சனத்தையும் வைத்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.