Advertisment

பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைப்பது சாத்தியமில்லை : நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Tamilnadu News Update : ஒன்றிய அரசு மீண்டும் 2014-ல் இருந்த அளவிற்கு பெட்ரோல் டீசல் வரியை குறைத்துக்கொண்டால், மாநில அரசின் வரி விதிப்பு தானாகவே குறைந்துவிடும்.

author-image
WebDesk
New Update
பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைப்பது சாத்தியமில்லை : நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Tamilnadu Finance Minister PTR Statement For Fuel Price Reduce: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை தினந்தோறும் மாற்றியமைக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் தினந்தோறும் ஏற்ற இறங்கங்களை சந்தித்து வந்த பெட்ரோல் டீசல் விலை கடந்த சில மாதங்களாக ரூ100-ஐ கடந்து தொடர் ஏற்றம் கண்டு வருகிறது. இதனால் வாகனஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

Advertisment

இதனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு பட்ஜெட் கூட்டத்தொடரில் பெட்ரோல் டீசல் மீதான வரியை ரூ3 குறைப்பதாக அறிவித்தது. இதனால் வாகனஓட்டிகள் சற்று நிம்மதியடைந்த நிலையில், திடீரென கடந்த தீபாளி தினத்தில் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. அதன்படி பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 10-ரூபாயும் குறைப்பதாக அறிவித்தது. இந்த வரி குறைப்பினால் பெட்ரோல் டீசல் விலை சிறிது குறைந்தது.

மத்திய அரசின் இந்த வரிகுறைப்பை தொடர்ந்து மாநில அரசுகளும் பெட்ரோல் டீசல் மீதான தங்களது வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் டீசல் மீதான மாநில வரி குறைக்கப்பட்டது. ஆனால் இதில் தமிழக அரசின் தரப்பில் எவ்வித வரிகுறைப்பும் அறிவிக்கப்படாதது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்கட்சியினர் தமிழக அரசின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றனது.

தற்போது இதற்கு பதில் அளித்துள்ள தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழகத்தில் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைக்க சாத்தியமில்லை என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு்ளள அறிக்கையில்,

கடந்த ஏழு ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசல் மீது ஒன்றிய அரசு தனது வரியை மிக அதிகமாக பலமுறை உயர்த்தி, மக்களின் மீது பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவ்வாறு உயர்த்தப்பட்டுள்ள வரியைக் குறைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.

இதற்கு ஒன்றிய அரசு செவிசாய்க்காத நிலையில், 13.08.2021 அன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டில் 2.63 கோடி இருசக்கர வாகனங்கள் பயன்படுத்தும் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயனடையும் வகையில்,  நமது நாட்டிற்கே முன்னோடியாக பெட்ரோல் மீதான மாநில வரியை லிட்டர் ஒன்றிற்கு 3 ரூபாய் குறைத்து அறிவித்தோம். இதனால், ஆண்டு ஒன்றிற்கு மாநில அரசிற்கு ரூ.1,160 கோடி இழப்பு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டது. கடந்த அரசு விட்டுச்சென்ற நிதி நெருக்கடிச் சூழலிலும் இதனை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

ஒன்றிய அரசால் பெட்ரோல் மற்றும் டீசல் மீது வரி குறைப்பதற்கு முன்பாக, பெட்ரோல் மீதான ஒன்றிய அரசின் வரி லிட்டர் ஒன்றிற்கு 32.90 ரூபாயாகவும், டீசல் மீதான வரி லிட்டர் ஒன்றிற்கு 31.80 ரூபாயாகவும் இருந்தன. இதை, பெட்ரோல் மீது லிட்டர் ஒன்றிற்கு 27.90 ரூபாயாகவும், டீசல் மீது லிட்டர் ஒன்றிற்கு 21.80 ரூபாயாகவும் ஒன்றிய அரசு தற்போது குறைத்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தற்பொழுது பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி லிட்டர் ஒன்றிற்கு ரூ.21.46 ஆகவும், டீசல் மீதான வரி லிட்டர் ஒன்றிற்குரூ.17.51 ஆகவும் உள்ளன.

முதலமைச்சர் தலைமையிலான இந்த அரசு ஏற்கெனவே பெட்ரோல் மீதான வரியை லிட்டர் ஒன்றிற்கு ரூ.3 அளவிற்கு குறைத்துள்ளது. இந்த வரி குறைப்பு 14 ஆகஸ்ட் 2021 முதல் அமல்படுத்தப்பட்டது. ஒன்றிய அரசு கடந்த ஏழு ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை தொடர்ந்து அதிகரித்தது. இதை, மீண்டும் 2014-ல் இருந்த அளவிற்குக் குறைத்துக்கொண்டால், மாநில அரசின் வரி விதிப்பு தானாகவே குறைந்துவிடும். ஏனென்றால், இந்த வரி விதிப்பு அடிப்படை விலை மற்றும் ஒன்றிய அரசின் வரி விதிப்பின் மீது விதிக்கப்படும் வரியாகும்.

எனவே, ஒன்றிய அரசின் வரி அளவு இன்னும் அதிகமாக தொடர்ந்து இருந்து வரும் நிலையில், மாநில அரசின் வரி அளவு மேலும் குறைக்கப்படுவது நியாயமும் அல்ல, சாத்தியமும் அல்ல. இதனைக் கருத்தில் கொண்டு, 2014-ம் ஆண்டு இருந்த அளவிற்கு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை ஒன்றிய அரசு குறைக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Ptrp Thiyagarajan Fuel Price
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment