கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த தமிழக மீனவர் உடல் கரை ஒதுங்கியுள்ள நிலையில், தமிழக – கர்நாடக எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.
சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே தமிழக - கர்நாடக எல்லையில் அடிப்பாலாறு ஓடுகிறது. இந்த பகுதி பாலாறு, காவிரி ஆற்றுடன் இணையும் இடமாகும். இங்கு கடந்த 14- ஆம் தேதி இரவு மீனவர்களான கொளத்தூர் காரைக்காடு பகுதியை சேர்ந்த காரவடையான் ராஜா, செட்டிப்பட்டியை சேர்ந்த ரவி, இளையபெருமாள் ஆகியோர் பரிசல் ஒன்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.
இதையும் படியுங்கள்: போலி டெலிகால் சென்டர் வைத்து மோசடி: கைது செய்த காவல்துறை
அப்போது அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிகிறது. இந்த துப்பாக்கிச்சூட்டின் போது மீனவர்கள் ரவி, இளையபெருமாள் ஆகியோர் தப்பி ஓடியதாகவும், ராஜா என்ற மீனவர் மட்டும் கர்நாடக வனத்துறையின் துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து அறிந்த கிராம மக்கள் கொளத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது துப்பாக்கிச்சூடு நடந்தது உண்மைதான் என அறிந்து கொண்டார். ஆனால் இந்த துப்பாக்கிச்சூட்டின் போது காயம் அடைந்ததாக கூறப்படும் ராஜா, அவருடன் இருந்த இளையபெருமாள், ரவி ஆகியோரும் மாயமாகி இருந்தனர். பின்னர் 2 நாட்களுக்குப் பின்னர் இளையபெருமாள் மற்றும் ரவி வீடு திரும்பினர். ஆனால் ராஜா மட்டும் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் அடிப்பாலாறு ஆற்றின் கரையோரப் பகுதியில் ராஜா உடல் கண்டெடுக்கப்பட்டது. கர்நாடகா வனத்துறை துப்பாக்கி சூட்டில் இவர் பலியானதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் சம்பவம் நடந்த பகுதி கர்நாடக வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வனவிலங்குகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ள இடமாகும். இங்கு 3 பேரும் மான் வேட்டையாட சென்றபோது கர்நாடக வனத்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கர்நாடக வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் அவர்களின் பரிசில் இருந்து 2 மூட்டை மான் இறைச்சி, நாட்டுத்துப்பாக்கி ஆகியவற்றையும், பரிசலையும் கர்நாடக வனத்துறை பறிமுதல் செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், நேற்று சம்பவம் நடந்த இடத்துக்கு பெங்களூருவில் தடயவியல் நிபுணர்கள் நேரில் வந்து அங்கிருந்த தடயங்களை சேகரித்து சென்றுள்ளனர். மேலும் 3 பேரும் மான் வேட்டையில் இருப்பதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டு, அவர்கள் 4 பேர் மீது மாதேஸ்வரன் மலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இந்தநிலையில், இன்று ராஜா உடல் கரை ஒதுங்கியுள்ள நிலையில், தமிழக – கர்நாடக எல்லையில் பதற்றம் நிலவுகிறது. மேலும், பாலாறு வழியே தமிழக – கர்நாடகா இடையேயான அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.