புயல் எச்சரிக்கை குறித்த தகவல் தெரிவித்து 4 நாட்களாகியும் தங்கு கடல் மீன்பிடிப்புக்கு சென்ற கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மொத்தம் 66 விசைப்படகுகள் இன்னும் கரை திரும்பவில்லை. இவற்றில் சென்ற 520 மீனவர்களின் நிலை இன்னும் தெரியவில்லை.
தென்கிழக்கு அரபிக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கடந்த 3-ம் தேதி புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து, குமரி மாவட்ட மீன்பிடி துறைமுகங்களில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று முன்தினமே கரை திரும்பின.
ஆனால், கேரள மாநிலம் கொச்சி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தங்கு கடல் மீன்பிடிப்புக்கு சென்ற 80-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கரை திரும்பவில்லை. இதையடுத்து இந்திய கடற்படை மற்றும் விமானப்படை மூலம் புயல் எச்சரிக்கை குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று கேரளா, குஜராத், மஹாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநில கடல் பகுதிகள் மற்றும் லட்சத்தீவில் 13 படகுகள் கரை சேர்ந்தன.
கரைதிரும்பாத எஞ்சிய படகுகளில் உள்ள சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவர்களின் கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை.
இதுகுறித்து பேட்டியளித்த தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி, "தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற 115 விசைப்படகுகளில் 2 படகுகள் மட்டும் இன்னும் கரை திரும்பவில்லை. அந்த படகுகளை தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்திய கடலோர காவல் படை மற்றும் கடற்படைக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு, விமானங்கள் மூலம் அந்த படகுகளை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.
குமரி மாவட்ட பேரிடர் கண்காணிப்பு அதிகாரியான ஜோதி நிர்மலா கூறும்போது, "ஆழ்கடலுக்கு சென்ற இன்னும் 64 விசைப்படகுகள் கரைதிரும்ப வேண்டியுள்ளது. மீனவர்கள் பத்திரமாக கரை திரும்ப அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன" என்றார்.
இருப்பினும், நான்கு நாட்களாக கரை திரும்பாத மீனவர்களின் நிலை என்னவென்று தெரியாமல், உறவினர்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.