சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு புயல் பாதித்த மாவட்டங்களாகவும், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் வெள்ளம் பாதித்த மாவட்டங்களாகவும் அறிவித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த 3, 4 ஆம் தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. இதனால், பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.
அதேபோல் குமரிக்கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 16 ஆம் தேதி இரவு முதல் 18 ஆம் தேதி பகல் வரை இடைவிடாத மழை பெய்தது.
தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆறுகளின் கரையோரம் இருக்கும் அனைத்து ஊர்களையும் வெள்ளம் சூழ்ந்தது. உயிர்ச்சேதம், சொத்துகள் சேதம், பொருட்சேதம், பயிர்ச்சேதம், கால்நடைகள் சேதம்என பல வகைகளிலும் இந்த 2 மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல கிராமங்களில் நெல், வாழை போன்ற விளைநிலங்கள் முற்றிலும் சேதமானதால் விவசாயிகள் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வருவாய் நிர்வாக ஆணையரின் கோரிக்கையை ஏற்று, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களை, புயல் பாதிப்பு மாவட்டங்களாகவும்; திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களை, வெள்ள பாதிப்பு மாவட்டங்களாகவும் அரசு அறிவித்துள்ளது.
இதற்கான அரசாணையை, வருவாய்துறை செயலர் ராஜாராமன் வெளியிட்டுள்ளார்.
முன்னதாக தமிழக வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
ஆனால், தமிழக மழை, வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இந்நிலையில்தான், 10 மாவட்டங்களை புயல், வெள்ளம் பாதித்த மாவட்டங்களாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“