கொடைக்கானலில் புகழ்பெற்ற பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தற்காலிக தடை விதித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலை வாசஸ்தலமான கொடைக்கானலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை மற்றும் கோடை காலங்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
மலைகளின் இளவரசியான கொடைக்கானலை பொறுத்தவரை குணா குகை, மேயர் சதுக்கம், நட்சத்திர ஏரி, தூண் பாறை, பேரிஜம் ஏரி, பசுமை பள்ளத்தாக்கு, பைன் பாரஸ்ட் மற்றும் சூசைட் பாயிண்ட் உள்ளிட்ட பிரபலமான இடங்கள் உள்ளன. இவற்றில் ஒரு சில பகுதிகளுக்கு வனத்துறையினர் அனுமதி வழங்கினால் மட்டுமே செல்ல முடியும்.
இந்நிலையில் வார விடுமுறை மற்றும் மிலாடி நபி விடுமுறையை முன்னிட்டு ஏராளமானோர் கொடைக்கானலுக்கு வருகை தந்துள்ளனர். ஆனால் பேரிஜம் ஏரியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் செல்ல தற்காலிகமாக தடை விதித்து வனத்துறையினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனால் குடும்பத்துடன் சுற்றுலா வந்த சுற்றுலாப் பயணிகள் பேரிஜம் ஏரியை காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
அதேநேரம் வனத்துறையினர் யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டிய பிறகு மீண்டும் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“