முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ள நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கை திரும்ப பெற்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2001-2006-ம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில், மறைந்த ஜெயலலிதா முதல்வரா இருந்தார். அப்போது வருவாய்த்துறை அமைச்சராக இருந்த ஒ.பன்னீர்செல்வம், வருமானத்திற்கு அதிகமாக 1.77 கோடி சொத்து சேர்த்ததாக அடுத்து வந்த தி.மு.க ஆட்சி காலத்தில், லஞ்ச ஒழிப்புத்துறையின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற இந்த வழக்கு கடந்த 2012-ம் ஆண்டு சிவகங்கை நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய்பட்டது.
இதில் ஒ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி, மகன் ரவீந்திரகுமார், தம்பி ஒ.ராஜா, பாலமுருகன், மற்றும் அவரது மனைவி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும் ஒ.பன்னீர்செல்வம் மீது வழக்கு தொடர வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் அ.தி.மு.க ஆட்சி வந்தபோது, ஒ.பன்னீர்செல்வம் மீது வழக்கு தொடர வழங்கப்பட்ட அனுமதியை திரும்ப பெற்று தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் வழக்கை திரும்ப பெற கோரி சிவகங்கை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றமும், கடந்த 2012-ம் ஆண்டு ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. தற்போது இந்த வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும் என்று கூறி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார்.
மேலும், இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவித்து சிவகங்கை நீதிமன்றம் கடந்த 2012-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். வழக்கின் விசாரணையை தினந்தோறும் நடத்தி 2025-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி, அவரது தம்பி பாலமுருகன் ஆகியோர் இறந்துவிட்டதை தொடர்ந்து அவர்கள் மீதான வழக்கு கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“