Advertisment

தி.மு.க - பா.ஜ.க ரகசிய கூட்டணி: அ.தி.மு.க திட்டங்களை செயல்படுத்தும் தி.மு.க; இ.பி.எஸ் விமர்சனம்

ஆறு மாதத்தில் செய்ய வேண்டிய பணிகளை திமுக மூன்று வருடங்களாக செய்துள்ளது. இதனால் கடந்த 2.5 வருடங்களாக விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நீர் கிடைக்காமல் போனது.

author-image
WebDesk
New Update
eps tiru

திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்தவர், திமுக பாஜக இடையே ரகசிய கூட்டணி இருப்பதாகவும், அதிமுக ஆட்சியில் கோவையில் கொண்டுவரப்பட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை திமுக கிடப்பில் போட்டுள்ளதாகவும் விமர்சித்தார்.

Advertisment

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், 'அதிமுக ஆட்சியின் போது கோவை மாவட்டம் மற்றும் கோவை மாநகர பகுதிகளுக்கு மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. குறிப்பாக 1500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், காந்திபுரம் மற்றும் ராமநாதபுரம் மேம்பாலங்கள், உக்கடம் மேம்பாலம் ஆகியவை அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்டது. உக்கடம் மேம்பாலம் அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் மேம்பால பணிகள் கிடப்பில் போடப்பட்டு பணிகள் சுணக்கமடைந்தது. எஞ்சிய பணிகளை முடித்து இப்போது முதல்வர் அதனை திறந்து வைத்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன்பே பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக உக்கடம் மேம்பாலம் திறந்து வைக்கப்பட்டிருக்க வேண்டும். இதேபோல் பெரியநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம், ஈச்சனாரி ஆகிய பகுதிகளில் மேம்பால பணிகள் நடைபெறுகிறது.

கிணத்துக்கடவு, ஒத்தக்கால் மண்டபம், காரமடை ஆகிய பகுதிகளில் அதிமுக ஆட்சியில் தான் பாலங்கள் கட்டப்பட்டன. பில்லூர் மூன்றாம் கட்ட குடிநீர் திட்ட பணிகளுக்கு 750 கோடி ரூபாய் அதிமுக ஆட்சியில் தான் ஒதுக்கப்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடங்கள் என பல்வேறு திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தான் கோவையில் கொண்டுவரப்பட்டது. அவிநாசி அத்திக்கடவு திட்டம் என்பது 60 ஆண்டு கால விவசாயிகளின் கனவாக இருந்தது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் திட்டம் தயாரிக்கப்பட்டு அதிமுக ஆட்சியில் அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வந்தது. 90 சதவீத பணிகள் முடிவடைந்த போது, கொரோனா பரவல் காரணமாக தொய்வு ஏற்பட்டது. அதற்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. திமுக இந்த மூன்றாண்டுகளில் கிடப்பிலிருந்த 10 சதவீத பணிகளை தான் முடித்து தற்போது திறந்து வைத்துள்ளது. ஆறு மாதத்தில் செய்ய வேண்டிய பணிகளை மூன்று வருடங்களாக செய்துள்ளது. இதனால் கடந்த 2.5 வருடங்களாக விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நீர் கிடைக்காமல் போனது.

இதேபோல் கோவை விமான நிலைய விரிவாக்கம், வெள்ளலூர் பேருந்து நிலையம், மேட்டுப்பாளையம் புறவழிச்சாலை, மேலும் பாலக்காடு, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், அவிநாசி சாலை ஆகியவை அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்ட திட்டங்கள் ஆகும். மேலும் அதிமுக ஆட்சியில் கோவையில் ஆறு புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்பட்டன. அவிநாசி அத்திக்கடவு இரண்டாம் கட்டத்திற்கான விரிவான திட்டம் அதிமுக ஆட்சியில் தயாரிக்கப்பட்டு தற்போது அது கைவிடப்பட்டுள்ளது.

மிக முக்கியமாக கோவைக்கான மெட்ரோ திட்டம் அதிமுக ஆட்சியில் தான் திட்டமிடப்பட்டு, தற்போது ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. மேற்குப் புறவழிச் சாலை திட்டத்தில் ஒரு பகுதிக்கு மட்டுமே டெண்டர் விடப்பட்டு மீதமுள்ள பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது போன்ற பல பணிகளை பல திட்டங்களை கோவை மாவட்டத்திற்கும் மாநிலத்திற்கும் அதிமுக வழங்கி உள்ளது' என தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்தவர், கலைஞர் நினைவு நாணய வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் மற்றும் பாஜகவினர் கலந்து கொண்டிருப்பது திமுக பாஜக இடையே உள்ள ரகசிய கூட்டணியை வெளிப்படுத்தி உள்ளதாகவும், திமுகவினரின் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பாஜக தலைவர்கள் இதற்கு முன்பும் கலந்து கொண்டுள்ளதாகவும் கூறினார். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரளாவை கண்டித்து திமுகவும் அதன் கூட்டணி கட்சிகவும் எதுவுமே பேசவில்லை எனவும் தெரிவித்தார்.

முல்லைப் பெரியாறு அணை வலிமையாக இருப்பதாக அதிமுக ஆட்சி காலத்தில் நிரூபிக்கப்பட்டு அதற்காக மத்திய குழு அமைக்கப்பட்டு அணையின் வலிமை உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tirupur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment