/indian-express-tamil/media/media_files/2025/07/16/eps-2025-07-16-17-28-13.jpg)
மக்களை காப்போம் தமிழகத்தில் மீட்போம் என்ற தலைப்பில் தமிழக முழுவதும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதில் ஒரு பகுதியாக கடந்த இரண்டு நாட்களாக திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி 3வது நாளான இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் விவசாயிகள் மற்றும் சிறு குறு தொழில் முனைவர்களை சந்தித்து உரையாடினார். அப்போது தேசிய தென்னிந்திய நதிகளை இணைப்பு விவசாய சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.
அம்மனுவில் விவசாயிகளுக்கு லாபகரமான விலையை மத்திய அரசு இடமிருந்து வாங்கித் தர வேண்டும், கோதாவரி காவிரி இணைக்க வேண்டும், காவிரி அய்யாறு போன்றவையை இணைக்க வேண்டும், காவிரியிலும் கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழங்கினார்.
இதே போல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு நிர்வாகி ராஜேந்திரன் வழங்கிய அம்மனுவில், வேளாண் பொருள்கள் தமிழக செலவினங்களை கணக்கில் கொண்டு நெல்லுக்கான கொள்முதல் விலையை மத்திய அரசு ஊக்கத்தொகையுடன் சேர்த்து தமிழக அரசு 3500 ஆக உயர்த்தி தர வேண்டும், கரும்புக்கான கொள்முதல் விலையை 4500 ஆக சர்க்கரை சத்துடன் சேர்த்து வழங்க வேண்டும், பால் கொள்முதல் விலையை ஊக்கத்தொகையுடன் சேர்த்து பசும்பால் லிட்டருக்கு 50ஆக எருமை பால் லிட்டருக்கு 55ஆகவும் உயர்த்தி தர வேண்டும்.
விவசாயிகள் விளைவிக்கும் சிறுதானியங்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். சிறுதானிய மதிப்பு கூட்டுப் பொருள் தயாரிக்க விவசாயிகளுக்கு மகளிர் கூட்டுறவு சங்கம் மூலம் பயிற்சி அளித்து அரசே கொள்முதல் செய்து ரேஷன் பொது விநியோகத்தில் மக்களுக்கு வழங்க வேண்டும். வேளாண் மானியங்களை அரசு மாற்றி உழவு மானியம் மற்றும் உற்பத்தி சார்ந்த மானியமாக மாற்றி அமைக்க வேண்டும்.உட்பட பல்வேறு கோரிக்கைகளை வழங்கினார்.
தொடர்ந்து பல்வேறு விவசாயிகள் மற்றும் சிறு குழு தொழில் முனைவர்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கி உரையாடல் மேற்கொண்டனர். பின்னர், விவசாயிகள் மத்தியில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “விவசாய பணி கடினமான பணி, அதை நான் நன்கு உணர்ந்துள்ளேன். உணவும், நீரும் மனிதனின் அடிப்படை தேவை. விவசாயிகளின் அடிப்படை கோரிக்கையாக நீர் உள்ளது.
அதிமுக அரசின் ‘நீர் மேலாண்மை அமைப்பு’ மூலம் பருவ காலங்களில் கடலில் வீணாக கலக்கும் நீரை அளவீடு செய்தோம். இந்த நீரை சேமிக்கும் வகையில் எங்கெங்கு தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்பதை கணக்கெடுத்தோம். ஏரி, குளங்கள் கணக்கெடுக்கப்பட்டு தூர்வாரப்பட்டன. ஆனால், இந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன்பாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
மேட்டூரில் தொடங்கி காவிரி ஆறு கடலில் கலக்கும் 4 இடங்களில் தடுப்பணைகள் கட்டுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், திமுக அரசு பதவி ஏற்றவுடன் அதனை ரத்து செய்து விட்டது. விவசாயிகள் விளைவிக்கும் நெல், கரும்புக்கு மத்திய அரசு விலையை நிர்ணயம் செய்யும். மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை. ஆனாலும், தமிழக அரசு விவசாயிகளுக்கு மானிய தொகைகளை வழங்கும்.
விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு, கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்யக் கோரி கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். விவசாயிகளை பாதுகாக்கும் அரசாக அதிமுக அரசு இருந்து வருகிறது. சிறு, குறு தொழில்கள் நிறைந்த மாநிலமாக இந்தியாவிலேயே முதலிடத்தில் தமிழகம் உள்ளது. எனவே அதனை பாதுகாப்பது எனது கடமை” என எடப்பாடி பேசினார்.
இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கோகுல இந்திரா, செம்மலை, பரஞ்சோதி, சிவபதி, வளர்மதி, முன்னாள் எம்.பி.கள் ப.குமார், ரத்தினவேல் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.