தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், முன்னாள் தி.மு.க தலைவருமான கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது பெயரில் நாணயம் வெளியிடப்படும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் பங்கேற்று நாணயத்தை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி முத்திரை பதித்தவர் கலைஞர் கருணாநிதி. நாடக எழுத்தாளராக தமிழ் சினிமாவில் நுழைந்த அவர், தமிழில் பல கட்டுரைகள், இலக்கியங்களை எழுதியுள்ளார். இதன் காரணமாக முத்தமிழ் அறிஞர் என்று அழைக்கப்பட்ட கருணாநிதி, பல திரைப்படங்களுக்கு கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார். மேலும் ஒரு சில படங்களுக்கு பாடல்களும் எழுதியுள்ளார்.
அரசியலில், தி.மு.க. சார்பில் 5 முறை தமிழகத்தின் முதல்வராகவும் பணியாற்றியுள்ள கருணாநிதி, 1924-ம் ஆண்டு ஜூன் 3-ந் தேதி திருவாரூர் மாவட்டத்தில் பிறந்தவர். நாடகம் திரைப்படம், அரசியல் என தான் தொட்ட அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்த இவர், கடந்த 2018-ம் ஆண்டு, ஆகஸ்ட் 7-ந் தேதி தனது 94-வயதில் மரணமடைந்தார். இதனிடையே சமீபத்தில் அவரின் 100-வது பிறந்த நாள், கடந்த ஜூன் 3-ந் தேதி முதல்வர் கருணாநிதி மற்றும் தி.மு.க தொண்டர்கள் கொண்டாடினர்.
இதனைத் தொடர்ந்து கலைஞர் கருணாநிதி 100-வது வயதை எட்டியதை முன்னிட்டு அவரது நினைவை போற்றும் வகையில் நூற்றாண்டு நாணயம் வெளியிடப்பட உள்ளது. சென்னையில் வரும் ஆகஸ்ட் 10-ந் தேதி நடைபெற உள்ள கலைஞர் நூற்றாண்டு விழா நாணய வெளியீட்டு விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் பங்கேற்று நாணயத்தை வெளியிட உள்ளார். இதற்காக, கலைஞர் பெயரில் ரூ100 நாணயம் வெளியிட, மத்திய நிதி அமைச்சகத்திடம், முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு கோரிக்கை வைத்திருந்தார்.
கடந்த ஜூன் 3-ந் தேதி இந்த நாணயம் வெளியிட ஏற்பாடு செய்ய இருந்த நிலையில், நாணயத்தின் பயன்பாட்டு நடைமுறைகள் முடிவடையாததால், நிகழ்ச்சி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது அனைத்து பணிகளும் முடிந்துவிட்டதால் வரும் ஆகஸ்ட் 18-ந் தேதி நாணயம் வெளியிடப்பட உள்ளது. இந்த நாயணம் வெளியீட்டு விழாவில், தமிழ்நாட்டு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“