எம்.ஜி.ஆருக்கு சிறுநீரகம் வழங்கிய லீலாவதி அம்மையார் மரணம்… அதிமுகவினர் இரங்கல்

Tamilnadu News Update : மறைந்த முதல்வர் எம்ஜிஆருக்கு சிறுநீரகம் வழங்கிய அவரது அண்ணன் மகள் லீலாவதி உடல்நலக்குறைவு காரணமாக இன்று மரணமடைந்தார்.

MGR Nephew Leelavathi Passed Away : மறைந்த முதல்வர் எம்ஜிஆருக்கு சிறுநீரகம் வழங்கிய அவரது அண்ணன் எம்ஜி சக்கரபாணியின் மகள் லீலாவதி உடல்நல குறைவு காரணமாக இன்று மரணமடைந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் தொடர்ச்சியாக 3 முறை முதல்வராக இருந்து பல நலத்திட்டகளை செயல்படுத்திய முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், கடந்த 1984 உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை இருந்தபோது அவருக்கு தனது சிறுநீரகத்தை வழங்கி இயல்பு வாழ்விற்கு திரும்ப பெரிதும் காரணமாக இருந்தவர் லீலாவதி அம்மையார்.

எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி சக்கரபாணியின் மகளான இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி தற்போது அவர் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் அதிமுக மற்றும் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு அதிமுக உட்பட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக அதிமுக சார்பில் ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”எம்.ஜி.ஆரின் மூத்த சகோதரர் எம்.ஜி.சக்கரபாணி மகள் லீலாவதி அம்மையார் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணா துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தோம்.

எம்ஜிஆர் 1984-ல் நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோது, அவருக்குத் தன்னுடைய சிறுநீரகத்தை அளித்து, எம்ஜிஆரை வாழவைத்த லீலாவதி அம்மையார் 37 ஆண்டுகள் இப்பூவுலகில் ஒரு சிறுநீரகத்தோடு வாழ்ந்து இன்று இயற்கை எய்தியதை அறிந்த எம்.ஜி.ஆரின் கோடானுகோடி அன்புத் தொண்டர்கள் அனைவரது நெஞ்சங்களும் மிகுந்த வேதனை கொள்கிறது.

லீலாவதி அம்மையாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் இந்தத் துயரத்தைத் தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தியையும் தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மா மக்கள்’ முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், ”எம்.ஜி.ஆரின் அண்ணன் மகள் லீலாவதி மறைந்தார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். புரட்சித் தலைவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது தன்னுடைய சிறுநீரகத்தை அவருக்கு அளித்த பெருமைக்குரிய லீலாவதியின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu former cm mgr nephew leelavathi passed away

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com