அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி முடிவுக்கு வந்துள்ள நிலையில், அடுத்து நீங்கள் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஒ.பி.எஸ் நாளை மாலை இது குறித்து அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் அ.தி.மு.க பா.ஜ.க கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுகவுக்கு பின்னடைவு தான் ஏற்படும் என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த இரு கட்சிகளின் கூட்டணி எவ்வித சிக்கலும் இல்லாமல் தொடந்து வந்தது.
இதனிடையே சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி தமிழகத்தில் படுதோல்வியை சந்தித்தது. தொடர்ந்து 2முறை ஆட்சியில் இருந்த அதிமுக இந்த முறை 234 தொகுதியில் சுமார் 60-க்கு மேற்பட்ட தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், தமிழகத்தின் தென்பகுதியில் அதிமுகவுக்கு பலத்த அடி விழுந்தது. தேர்தல் தோல்வி குறித்து அதிமுக பாஜக இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துக்கொண்டனர்.
இதனிடையே பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து அதிமுக பாஜக இடையே பனிப்போர் நடைபெற்று வந்தது. இதனால் அவ்வப்போது இந்த கூட்டணி விரைவில் முடிந்துவிடும் என்று கூறப்பட்டு வந்தாலும், இருவருமே கூட்டணி குறித்து பாஜக மேலிடமே முடிவு செய்யும் என்று கூறி வந்தனர். இந்நிலையில், சமீபத்தில் மதுரையில் பேசிய அண்ணாமலை திராவிட கட்சியின் மூத்த தலைவர் அண்ணா குறித்து சர்ச்சை கருத்துக்களை பேசினார்.
இந்த கருத்துக்கள் அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அன்று மாலையே பாஜகவுடனான கூட்டணி முறிவு என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி முறிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்ட அதிமுக, விரைவில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் என்று கூறியிருந்தனர்.
அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி முறிவு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி விலகியதால் அடுத்து ஒ.பன்னீர்செல்வம் அதிமுகவுடன் கூட்டணி வைப்பார் என்று தகவல் வெளியானது. இதனிடையே இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை ஒ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது காவிரி குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்திய அரசியலமைப்பு சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்பை, மறுக்கின்ற செயல் இந்திய அரசியல் சட்டத்தின் மரியாதை தன்மையை கேள்விக்குறியாக்கும் நடவடிக்கையாக இருக்கிறது என்று கூறினார். தொடர்ந்து அதிமுக – பாஜக கூட்டணி முறிவு குறித்த கேள்விக்கு நல்ல நாளில் நல்லதை பேசுவோம் என்று கூறிய ஓ.பி.எஸ் பாஜகவுடன் நீங்கள் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு நாளை மாலை இந்த கேள்விக்கு உரிய பதில் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நண்பர்களுக்கு தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.