தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இவருக்கு வயது 96.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா பகுதியை சேர்ந்த பாத்திமா பீவி, உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி ஆவார். இவர் தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினராக இருந்துள்ளார்.
தமிழ்நாட்டில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது தமிழக ஆளுநராக புதியவர் நியமிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கையின் அடிப்படையில் தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 1997 முதல் 2001 தமிழக ஆளுநராக பதவி வகித்தார்.
1927ம் ஆண்டு பத்தினம்திட்டாவில் பிறந்தார். திருவனந்தபுரத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் வேதியியலில் பட்டப்படிப்பை முடித்தார். தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி படித்து முடித்தார். கேரளாவில் 1950ம் ஆண்டு வழக்கறிஞர் பணியை தொடங்கினார். அதன் பிறகு நீதித்துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார் என்பது குறிப்பிடதக்கது.
1983ம் ஆண்டு இவர் கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1989ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1993ம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு இவர் தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பாத்திமா பீவி, கொல்லம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“