சென்னை அசோக் நகர் சந்திப்பில், முன்னாள் நீதிபதியும், காவல் ஆணைய தலைவருமான சி.டி.செல்வத்தின் தனி பாதுகாப்பு அதிகாரியை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் நீதிபதியும், தற்போதைய காவல் ஆணைய தலைவருமான சி.டி.செல்வம், இன்று காலை தனது தனி பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுடன் சென்னை அசோக் நகரில் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 3 மர்மநபர்கள் அவரது காரை இடைமறித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சி.டி.செல்வத்தின் பாதுகாப்பு அதிகாரி அவர்களிடம் காரை மறித்தது குறித்து கேட்டுள்ளார்.
அப்போது மர்மநபர்கள் 3 பேரும், திடீரென தங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சி.டி.செல்வத்தின் பாதுகாப்பு அதிகரியை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்த பாதுகாப்பு அதிகாரியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரைணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை தேடும் பணிக்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பட்டபகலில் ஓய்வு பெற்ற நீதிபதியின் பாதுகாப்பு அதிகாரி மர்மநபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜவால், விசாரணை மேற்கொண்ட நிலையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து தப்பியோடிய குற்றவாளிகள் குறித்த விசாரணை நடத்தி வருகின்றனர். ஓய்வுபெற்ற நீதிபதி சி.டி.செல்வம், அப்பகுதியில் உள்ள ஒரு காவலர் பயிற்சி மையத்தில் காவலர்களுக்கு பயிற்சி அளிக்க சென்றபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “