தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் முக்கிய ஆதரவாளர்கள் 9 பேர், மீண்டும் கட்சியில் சேர்க்க வலியுறுத்தி திமுக கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு மன்னிப்பு கடிதம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அமைச்சராக இருந்து தென்மாவட்ட தி.மு.க.,வை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி. ஒரு கட்டத்தில் அவர் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக 2014ல் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அவருடன் சேர்த்து அவரது நெருங்கிய ஆதரவாளர்களாக இருந்த அப்போதைய மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் மன்னன், முன்னாள் அவைத்தலைவர் இசக்கிமுத்து, நகர துணை செயலர்கள் உதயகுமார், எம்.எல்.ராஜ், முன்னாள் மண்டல தலைவர் கோபிநாதன், தொண்டரணி முபாரக் மந்திரி உட்பட 15 நிர்வாகிகளும் நீக்கப்பட்டனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்குப் பின், ஸ்டாலினுக்கு எதிராக சில கருத்துகளை தெரிவித்து வந்த அழகிரி, தமிழகம் முழுதும் உள்ள அவருடைய ஆதரவாளர்களை சந்தித்தார். தனிக்கட்சி துவங்கப் போவதாகக்கூட தகவல் வெளியானது. ஆனால், சட்டசபை தேர்தலில் தி.மு.க., வெற்றி, ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றது போன்ற அடுத்தடுத்த நிகழ்வுகளால் சமாதானம் ஆன அழகிரி, தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார்.
இந்நிலையில் நீக்கப்பட்ட பல நிர்வாகிகள் மன்னிப்பு கோரி தி.மு.க தலைமைக்கு கடிதம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10 ஆண்டுகளாக வேறு கட்சிக்கு செல்லவில்லை. மீண்டும் கட்சியில் சேர அழகிரியும் ஒப்புதல் அளித்து விட்டதாகவும் இதையடுத்தே, மன்னிப்பு கடிதம் அளித்தாகவும். இனி, ஸ்டாலினுக்கும் விசுவாசமாக இருக்கபோவாதாகவும் தெரிவிக்கப்படுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“