திருச்சி அ.தி.மு.க புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில், விடியா தி.மு.க அரசை கண்டித்து, தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க, கல்லக்குடி பேரூர் கழகம் சார்பில், கல்லக்குடி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்திற்கு, மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ப.குமார் தலைமை வகித்தார். கல்லக்குடி பேரூர் கழகச் செயலாளர் பிச்சைபிள்ளை முன்னிலை வகித்தார்.
கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி பொதுக்கூட்டத்தில் பேசுகையில், மகளிர் உரிமைத்தொகை எனக் கூறி 15 நிபந்தனைகளை விதித்து பல பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கவில்லை. இந்த மாதம் வந்த பணம் அடுத்த மாதம் வராது. ஏன் என்று கேட்டால் நீங்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்து உள்ளீர்கள் எனக் கூறி உங்களுக்கு வர வேண்டிய பணத்தை தள்ளுபடி செய்து விடுவார்கள் அல்லது நீக்கிவிடுவார்கள்.
இதுபோன்ற பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்று விட்டார்கள். மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்கள் பெண்கள் உயர்வுக்காக, குறிப்பாக கிராமப்புற பெண்களின் உயர்வுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். மின்விசிறி, கிரைண்டர், ஆடு, மாடு வழங்கும் திட்டமானாலும் சரி, சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் திட்டமாக இருந்தாலும் சரி, பெண் குழந்தை திட்டம், தாய்ப்பால் ஊட்டும் அறை என பல நல்ல திட்டங்களை கொடுத்தவர் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா.
விவசாயிகளைப் பற்றி விவசாய குடும்பத்தில் பிறந்த ஒருவருக்கு மட்டும் தான் தெரியும் அவர்தான் எடப்பாடியார் அவர்கள், அவரைப் போன்றே அண்ணன் குமார் அவர்களும் நானும் இங்கு உள்ள பலரும் விவசாயத்தைப் பற்றி தெரிந்தவர்கள். ஆனால், மு.க ஸ்டாலின் எனும் முத்துவேல் கருணாநிதி மகன் ஸ்டாலின் நான் "டெல்டாகாரன்" என ஒரு கூட்டத்தில் சொல்கிறார். ஆனால், நான் சொல்கிறேன் அவர் டெல்டாகாரன் அல்ல, அவர் ஒரு உல்ட்டாக்காரன், அவர் அனைவரையும் ஏமாற்றுவதில் தான் இருக்கிறார். அவர் ஒரு உல்டாக்காரன், அவர் விவசாயி அல்ல.
விவசாய நிலத்தில் யாராவது பேண்ட் சர்ட் அணிந்து செல்வார்களா? வயலுக்குள் கான்கிரீட் ரோடு அமைத்து நடந்து செல்வார்களா? ஆனால், நம்முடைய முதலமைச்சராக இருந்த அண்ணன் எடப்பாடியார் அவர்கள் விவசாயிகளை பாதுகாக்க, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்காக விவசாயிகள் நன்றி கூறும் விழாவில் கலந்து கொள்ள திருவாரூர் செல்லும் பொழுது வயல்வெளியை கண்டதும் நாத்து நடுவதற்கு இறங்கி விட்டார்.
அப்போது விவசாயிகளோடு, உணவுத்துறை அமைச்சர் காமராஜரும் உடன் இருந்தார். விவசாயியைப் பற்றி விவசாயிக்கு மட்டும்தான் தெரியும். அதனால் தான் எடப்பாடியாருக்கு காவிரி காப்பாளர் என்று விவசாயிகள் பட்டம் வழங்கினர் என்றார். இந்நிகழ்வில் அவைத்தலைவர் அருணகிரி, மாவட்ட துணை செயலாளர் செல்வ மேரி ஜார்ஜ், எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“