நடப்பு கல்வி ஆண்டில் 851 எம்.பி.பி.எஸ் மற்றும் 38 பி.டிஎஸ் படிப்புக்கான இடங்களை மத்திய அரசிடம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 36 மருத்துவக் கல்லூரிகளில் 15% இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாநில அரசு ஒப்படைக்கும். அந்த வகையில், இந்த ஆண்டு, 851 எம்.பி.பி.எஸ் இடங்கள், 38 பி.டி.எஸ் இடங்களை மருத்துவ சேவைகள் இயக்குநரகம், கவுன்சிலிங் நடத்தும் மத்திய குழுவிடம், அரசு ஒப்படைக்கும்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழகத்துடன் இணைந்த கே.கே.நகர் இ.எஸ்.ஐ.சி மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதிக் கல்லூரிகள், மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் மூன்று தனியார் பல்கலைக்கழகங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட இடங்கள் ஆகியவற்றில் உள்ள அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களுக்கான சேர்க்கைக்கு நான்கு சுற்று ஆன்லைன் கவுன்சிலிங் நடைபெறும்.
இந்த கவுன்சிலிங் - A, A1, B, C, D – என 5 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன இதில் A மற்றும் C என்பது அரசு மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் 85% இடங்களைக் குறிக்கிறது. B மற்றும் D என்பது சுயநிதி மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களைக் குறிக்கிறது. A1 என்பது இ.எஸ்.ஐ.சி (ESIC) மருத்துவக் கல்லூரி, கே.கே.நகர், சென்னை என்பதைக் குறிக்கிறது.
இதனையடுத்து மாநில அரசு கல்லூரிகளில் கட்டணம் ரூ18,073 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ16,073 மற்றும் இ.எஸ்.ஐ.சி (ESIC ) கல்லூரிக்கு ரூ1 லட்சம். சுயநிதி கல்லூரிகளில் அரசு இடங்கள் ரூ4.35 லட்சம் முதல் ரூ4.50 லட்சம் வரை இருக்கலாம் என்று வரையெறுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அரசு தனியார் பல்கலைக்கழகங்கள் ஆண்டுக்கு ரூ5.40 லட்சம் மற்றும் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகள் ரூ2.50 லட்சம் வசூலிக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மேலாண்மை இடங்கள், என்.ஆர்.ஐ இடங்கள், காலாவதியான இருக்கும் என்ஆர்ஐ இடங்கள் மற்றும் சிறுபான்மையினர் இடங்களுக்கான கட்டணக் கட்டமைப்பை கட்டண நிர்ணயக் குழு அறிவித்துள்ளது. அதன்படி மேலாண்மை ஒதுக்கீடு இருக்கைக்கு, கல்வி கட்டணம் ரூ13.50 லட்சம், என்.ஆர்.ஐ (NRI) இடங்களுக்கு ரூ24.50 லட்சம் மற்றும் என்.ஆர்.ஐ (NRI) காலாவதியான இடங்களுக்கு ரூ21.50 லட்சம். கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் கல்விக் கட்டணம் ரூ53,000 என நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் மூன்று அரசு தனியார் பல்கலைக்கழகங்கள் மேலாண்மை ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ16.20 லட்சம் வசூலிக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், என்.ஆர்.ஐ (NIR) இடங்களுக்கு ரூ29.40 லட்சமும், என்.ஆர்.ஐ (NRI) காலாவதியான இடங்களுக்கு ₹25.80 லட்சமும் வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“