கோவையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அதிமுக பாஜக கூட்டணி குறித்து கேட்டபோது, கூட்டணியும் கிடையாது புண்ணாக்கும் கிடையாது என கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பிஆர்ஜி அருண்குமார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அ.தி.மு.க அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் அ.தி.மு.க.வின் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவரிடம், அண்ணாமலையை நீக்கினாலோ, அல்லது அண்ணாமலை வருத்தம் தெரிவித்தாலோ மீண்டும் கூட்டணி அமைக்கப்படுமா என செய்தியாளர் கேள்வி எழுப்பிய நிலையில், வேலுமணி அந்த கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்றுவிட்டடார். தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவராக மேடையில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி.ஆர்.ஜிஅருண்குமார் கூட்டணியும் கிடையாது ஒரு புண்ணாக்கும் கிடையாது என கூறிச் சென்றார். அவரின் இந்த பேச்சு இனி அதிமுக பாஜக இணையும் சூழ்நிலை இல்லையா, அப்படி இல்லை என்றால் அதிமுகவில் அடுத்த திட்டம் என்ன என்பது குறித்து அரசியல் ஆர்வலர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“