சிலைக் கடத்தல் தொடர்பான வழக்கின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும்படி, சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரித்து வந்த காவல்துறை அதிகாரி பொன் மாணிக்கவேல் ஓய்வுபெறும் நேரத்தில், அவரை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரியாக சென்னை உயர்நீதிமன்றம் நியமித்தது. இந்த உத்தரவை எதிர்த்தும், சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ததை எதிர்த்தும் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதற்கிடையே, சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் நியமனத்திற்கு எதிராக எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி. உள்ளிட்ட 66 போலீசார் உச்சநீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்தனர்.
இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அப்போது, பொன் மாணிக்கவேல் எந்த சிறப்பான வேலையும் செய்யவில்லை என்றும், அவர் தன்னைத் தானே புகழ்ந்துகொண்டு இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்தது. மேலும், 2018ம் ஆண்டு நவம்பர் 30-ல் ஓய்வுபெற்ற பொன் மாணிக்கவேல், சிலை கடத்தல் வழக்கை எவ்வாறு விசாரிக்க முடியும்? என்றும் தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
பொன்.மாணிக்கவேல் தங்களது விசாரணையில் தலையிட்டு, கொடுமைப்படுத்துவதாக போலீசார் தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சிலைக் கடத்தல் வழக்கு விசாரணை தொடர்பான அறிக்கையை பொன் மாணிக்கவேல் பிப்ரவரி 19-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், இந்த தமிழக அரசு மற்றும் போலீசார் தொடர்ந்த வழக்குகளின் விசாரணையையும் பிப்ரவரி 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.