தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டி.ஜி.பி சுனில்குமார் நியமிக்கப்பட்டது தகுதியின் அடிப்படையில் தான் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டி.ஜி.பி சுனில்குமாரை நியமித்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் இந்தப் பதவியில் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை என்ற அடிப்படையில் இந்த உத்தரவு பேசுபொருளானது.
இதைத் தொடர்ந்து, அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இது தொடர்பான விசாரணை இன்று (மார்ச் 4) நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது, "தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டி.ஜி.பி சுனில்குமார் நியமிக்கப்படத்தில் எந்த அரசியல் காரணமும் இல்லை. முற்றிலும் தகுதியின் அடிப்படையில் தான் அவர் நியமிக்கப்பட்டார்" என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.