கொரோனா பாதிப்பு : மரணமடைந்த பத்திரிக்கையாளர்கள் குடும்பத்திற்கு ரூ10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

Press People Relief : கொரோனா பாதிப்பால் இறந்த பத்திரிக்கையாளர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பத்திரிக்கையாளர்களின் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், புதிய முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்று பாதிப்பை தடுக்க ஆலோசனை வழங்க எம்எல்ஏக்கள் குழு அமைக்கப்பட்டள்ளது.

இந்நிலையில், முதல்வராக பதவியேற்ற உடன் களத்தில் இறங்கி செய்தி சேகரிக்கும் பத்திரிக்கையாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து அரசாணை வெளியிட்டிருந்தார். இதில் கடந்த ஆட்சியின் போது பத்திரிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டு இறக்க நேரிட்டால் அவர்களின் குடும்பத்திற்கு ரூ 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த்து. இந்த தொகையை உயர்ந்து அளிக்கும்படி பத்திரிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போதைய தமிழக அரசு சார்பில் புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக  தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

கொரேனா நோய்த் தொற்று காலத்தில் பல்வேறு சிரமங்களுக்கிடையே ஊடகவியலாளர்கள் பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் மக்களுக்கு சரியாகக் கொண்டு சேர்ப்பதிலும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றி வருகிறார்கள். மக்களுக்கும், அரசுக்கும் ஒரு இணைப்புப் பாலமாக இக்காலக்கட்டத்தில் சிறப்பாக இயங்கிவரும் இவர்களது பணியினை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பதிவு செய்யப்பட்ட பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மற்றும் காலமுறை இதழ்களில் பணிபுரியும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் (அரசு அங்கீகார அட்டை / மாவட்ட ஆட்சியர் வாயிலாக வழங்கப்பட்ட அடையாள அட்டை / இலவசப் பேருந்துப் பயண அட்டை போன்ற ஏதேனும் ஒரு வகையில் அரசால் அங்கீகரிக்கப்பட்டவர்கள்) ஆகியோருக்கு சிறப்பு ஊக்கத் தொகையினை உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்கள்.

மேலும் கடந்த ஆட்சியின்போது ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை 3 ஆயிரம் ரூபாய் ஆகும். இதனை தற்போது உயர்த்தி வழங்கக் கோரி பெறப்பட்ட கோரிக்கையினை கனிவோடு பரிசீலித்த முதல்வர், ஊடகவியலாளர்களுக்கான  ஊக்கத் தொகையினை ரூபாய் 3 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அதேபோன்று, கடந்த ஆட்சியின்போது பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் பணிபுரியும் அரசு அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் கரோனா நோய்த் தொற்று காரணமாக இறக்க நேரிட்டால், அவர்களது வாரிசுதாரர்களுக்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. இதனையும் உயர்த்தி வழங்கக் கோரி ஊடகவியலாளர்கள் சார்பாக அளிக்கப்பட்ட கோரிக்கையினைப் பரிவுடன் பரிசீலித்து, அதனை ரூபாய் 10 லட்சமாக உயர்த்தி வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

மேலும், பத்திரிகைத் துறை மற்றும் அனைத்து ஊடகத் துறை நண்பர்களும் இந்த நோய்த் தொற்றுக் காலத்தில் மிகவும் பாதுகாப்பான முறையில் தங்கள் பணியினை கவனமுடன் மேற்கொள்ள முதல்வர் இத்தருணத்தில் கேட்டுக் கொண்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu government announcement 10 lakh for press people relief

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com