தடையை மீறி போராட்டம் மேற்கொண்டு வரும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், 7500 ரூபாய் ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்து வகுப்புகளை தொடரவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றது.
தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிகல்வித்துறை அறிக்கை
இந்நிலையில் ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கல்வி பாதிக்கப்படுவதாக மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், ஆசிரியர்கள் இன்று முதல் உடனே வேலைக்கு திரும்ப வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், சென்னையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் அவசர கூட்டத்தை நேற்று நடத்தினர். கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ், அரசு தரப்பில் அழைத்தால் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார். தமிழ்நாடு அரசு தங்கள் கோரிக்கையை ஏற்கும் வரை தங்களின் போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தார்.
இவர்களின் இந்த முடிவையடுத்து தமிழக கல்வித்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில் போராட்டங்களில் ஈடுபடுவது அரசு ஊழியர் நன்னடத்தை விதிகளுக்கு எதிரானது என்றும், இதனால் தேர்வுகளும், தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்தல் உள்ளிட்ட பணிகளும் பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
போராட்டத்தில் பங்கேற்கும் நோக்கத்துடன் விடுப்பு எடுப்பது விதிமீறல் என்றும், காரணங்கள் இல்லாமல் விடுப்பு எடுத்தால் இடைநீக்கம், ஊதியப் பிடிப்பு உள்ளிட்ட துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ விடுப்பு தவிர மற்ற விடுப்புகள் அனுமதிக்கப்படாது என்றும் மருத்துவ சான்றிதழ்கள் முறையாக ஆய்வு செய்யப்பட்ட பின்பே விடுப்பு அளிக்கப்படும் என்றும், அதில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. பகுதி நேர ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது தெரிந்தால் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் அறிக்கையில் உள்ளது.
அதேசமயம் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 17B விதியின் கீழ் நோட்டிஸ் அனுப்பப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த தற்காலிக ஆசிரியர்களை ரூ. 7,500 தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கவும் பள்ளிக் கல்வித்துறை அரசாணை பிறப்பித்துள்ளது.