தமிழகத்தில் அரசு பணியாளர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள சிபிஎஸ் எனப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனறும், மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் அரசு ஊழியர்கள் போராடி வரும் நிலையில், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட மூன்று ஓய்வூதிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த மாதம் 24ஆம் தேதி மத்திய அரசுப் பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதைப் பற்றி தமிழ்நாட்டிலும் பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட ஒரு குழு அமைத்திட அரசு முடிவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள 3 பேர் கொண்ட குழு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் செயல்படும் என்றும், சென்னை பொருளியல் கல்வி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் கே.ஆர். சண்முகம், தமிழ்நாடு அரசின் நிதித்துறை துணைச் செயலாளர் பிரத்திக் தாயாள் ஆகிய இருவரும் இந்த குழுவில் உறுப்பினர் செயலராக இடம்பெற்றுள்ளார். இந்த 3 பேர் கொண்ட குழு, நடைமுறைப்படுத்தத் தக்க உரிய ஓய்வூதிய முறை குறித்து, விரிவான அறிக்கையை தயார் செய்து 9 மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிவுறுத்தப்பட்டுள்ளது,
தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள சிபிஎஸ் எனப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து ரத்து செய்து விட்டு மீண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள். அவ்வப்போது போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், "சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம்" எனத் தனி அமைப்பையே உருவாக்கிப் போராடி வரும் நிலையில், தற்போது இது குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு குழு அமைத்துள்ளது.