தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் மூலம் நடத்தப்படும் கோயில் திருமணத்திற்கான திட்ட செலவினத்தொகையை ரூபாய் 20 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் ஆக உயர்த்திய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை கூட்டத் தொடரின் போது, இந்து சமய அறநிலையத்துறையின் அறிவிப்பில் 283 ஏழை இணைகளுக்கு கோயில் மூலம் இலவச திருமணம் நடத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த திட்டத்தின் மூலம் இலவச திருமணங்களை நடத்துவதற்கான திட்ட செலவினத் தொகை ரூபாய் 20 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரமாக உயர்த்திட உத்தரவிடப்பட்டுள்ளது.
கோயில்களில் இலவச திருமணம் நடத்தி வைப்பதற்கு உபயதாரர்கள் கிடைக்காத நிலையில், கோயில்கள் மூலமே திருமணம் நடத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
திருமாங்கல்யத்திற்கு 20 ஆயிரம் ரூபாயும், மணமகன் ஆடைக்கு ஆயிரம் ரூபாயும், மணமகள் ஆடை மற்றும் மொத்த உணவுக்கு தலா 2 ஆயிரம் ரூபாயும்; மாலை, பீரோ, கட்டில் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய சீர் என மொத்தம் 50 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.