எடப்பாடி அரசின் ஓராண்டு சாதனை விழா : சென்னையில் நாளை ஏற்பாடு

தமிழ்நாடு அரசு ஓராண்டு சாதனை விழா சென்னையில் நாளை நடக்கிறது. சாதனை விழா மலரை வெளியிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுகிறார்.

தமிழ்நாடு அரசு ஓராண்டு சாதனை விழா சென்னையில் நாளை நடக்கிறது. சாதனை விழா மலரை வெளியிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுகிறார்.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனை விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் மார்ச் 23-ம் தேதி (நாளை) மாலை 5 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு சட்டப்பேரவை தலைவர் தனபால் தலைமை ஏற்பார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார்.

தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓராண்டு சாதனை சிறப்பு மலர், சாதனை விளக்கப் படங்கள், குறும் பாடல்கள், புகைப்படத் தொகுப்பு, முதலமைச்சரின் உரைகள் மற்றும் பொன்மொழிகள் அடங்கிய தொகுப்பினை வெளியிட்டு விழாப் பேருரையாற்றுவார். அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு வாழ்த்துரை வழங்குவார்கள்.

தமிழ்நாடு அரசு ஓராண்டு சாதனை விழாவில் அமைச்சர்கள், சட்டப்பேரவை துணைத் தலைவர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கின்றனர். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்புரை ஆற்றுகிறார். அரசு செயலர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை வெங்கடேசன், நன்றி கூறுகிறார்.

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் கடந்த ஓராண்டில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், சாதனைகள், வளர்ச்சிப் பணிகள், வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் குறித்து பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் சாதனை விளக்க கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது.இதை முதல்வர் பழனிசாமி திறந்து வைக்கிறார். இக்கண்காட்சி பொதுமக்களின் பயன் கருதி ஒருவார காலத்திற்கு இருக்கும். பொதுமக்கள் கண்காட்சியை கண்டுகளிப்பதோடு, அரசின் திட்டங்களை தெரிந்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருக்கிறது.

 

×Close
×Close