பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை நாட்கள் வருவதால், சார்பதிவாளர்கள் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 2-வது வாரத்தில் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகை காரணமாக 3 அல்லது 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், அரசு அலுவலகங்களில், இந்த விடுமுறை நாட்களை ஈடு செய்யும் வகையில் சில சிறப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அந்த வகையில் ஜனவரி 17-ந் தேதி வரை பொங்கல் விடுமுறை என்பதால், ஜனவரி 18 முதல் 31-ந் தேதி வரை சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திர பதிவுக்கு கூடுதல் டோக்கன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொங்கல் விடுமுறைக்கு பின் அதிகளவு ஆவணங்கள் பதிவுக்கு வரும் வாய்ப்பு உள்ளதால், வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதன்படி, பொங்கல் விடுமுறை நாட்கள் முடிந்து, அடுத்து வரும் அனைத்து நாட்களிலும் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வழங்கப்படும். இதுவரை 100 டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், இனிமேல் இந்த டோக்கன்களின் எண்ணிக்கை 150-ஆக உயர்த்தி வழங்கப்படும். அதேபோல் 2 சார்ப்பதிவாளர்கள் பணியாற்றும் அலுவலகங்களில் 200-க்கு பதிலாக 300 டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல் சார்பதிவாளர் அலுவலகங்களில் தற்போது வழங்கப்பட்டு வரும் 12 தட்கல் டோக்கன் முறை அடுத்த நாட்களில் 20-ஆக உயர்த்த வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த டோக்கன் வழங்கும்முறை பொங்கல் பண்டிகை முடிந்து வரும் ஜனவரி 18-ந் தேதி தொடங்கி ஜனவரி 31-ந் தேதி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“