மத்திய மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள் பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பொங்கல் பரிசுத் தொகுப்பை உரிய முறையில் வழங்குவதற்கு அனைத்து முன்னேற்பாடுகளையும் ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், பொங்கல் பரிசு விநியோகம், கரும்புகளைக் கொள்முதல் செய்ய மாவட்டம், வட்டாரம் வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் வேளாண் துறை இணை இயக்குநர், கூட்டுறவுத்துறை இணை பதிவாளர், நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளரை அடங்கிய குழுவானது அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மண்டல கூடுதல் பதிவாளர் மற்றும் உதவி ஆணையர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
வட்டார அளவில் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க மேலாண் இயக்குநர் மற்றும் வேளாண்மை அலுவலர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உதவி ஆணையர் மற்றும் வேளாண்மை அலுவலர் கொண்ட குழு அமைத்து உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. கரும்பை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.
பரிசுத் தொகுப்பு விநியோகத்தை தினசரி கண்காணிக்க தொடர்பு அலுவலர்களை நியமிக்க வேண்டும்.
மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க கட்டுப்பாட்டு மையம் அமைக்க வேண்டும்.1967, 1800 425 5901 ஆகிய எண்களில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“