குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி முதல் தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள், பயனாளிகளை கண்டறிதல் உள்ளிட்ட பணிகளை மாவட்டத் தோறும் மேற்கொள்ள அதிகாரிகள், அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொருளாதார அளவுகோல் மற்றும் இதர விவரங்களை கொண்டு தகுதி வாய்ந்த மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டத்திற்கான மாதிரி விண்ணப்ப படிவம் 2 நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. சிறப்பு முகாம்கள் நடத்தி பயனாளிகளை கண்டறிந்து விண்ணப்பங்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகள், சமுதாயக் கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தி விண்ணப்பங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்பின் ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், "கலைஞர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்ப படிவம் வீடு வீடாக வழங்கவும் , விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்த பிறகு திரும்பி வாங்கவும் அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட இருக்கிறோம். ரேஷன் கார்டு எண்ணிக்கைக்கு ஏற்ப சிறப்பு முகாம்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிகள், சமுதாயக் கூடங்கள், அரசு அலுவலகங்களில் இந்த சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும். விண்ணப்ப படிவங்களை கொண்டு வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
கூட்ட நெரிசல் ஏற்படாமல் தடுக்க ஒரு நாளைக்கு ஒரு ரேஷன் கடைக்கு 50 முதல் 60 பேர் வரையில் வரவழைத்து விண்ணப்பம் வழங்க திட்டமிட்டு இருக்கிறோம். தமிழக அரசு அறிவிக்கும் தேதியில் இருந்து விண்ணப்பப் படிவம் விநியோகிக்கப்படும்.
ரேஷன் அட்டைகள் இல்லாமல் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கும் ரேஷன் அட்டை கிடைக்க ஏற்பாடு செய்து அவர்களுக்கு உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வங்கி கணக்கு இல்லை என்றாலும் புதிய வங்கி கணக்கு தொடங்கி அவர்களுக்கும் உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். உண்மையான பயனாளிகள் விட்டுப் போகக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“