/indian-express-tamil/media/media_files/2024/10/30/cqG693E4A0NCRdegiyX7.jpg)
தமிழக அரசு வழங்கும் கபீர் புரஸ்கார் விருதுக்கு தகுதிபெற்றவர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான 'கபீர் புரஸ்கார் விருது', ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்-அமைச்சரால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் (ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்புத் துறை மற்றும் அரசுப் பணியாளர்களின் சமுதாய நல்லிணக்க செயல், அவர்கள் ஆற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில் நீங்கலாக) இவ்விருதினைப் பெற தகுதியுடையவராவர்.
இவ்விருதானது, ஒரு சாதி, இனம், வகுப்பைச் சார்ந்தவர்கள் பிற சாதி, இன, வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது. இவ்விருதானது மூன்று அளவுகளில், தலா ஒரு நபர் வீதம் மூவருக்கு வழங்கப்படுகிறது. முறையே ரூ.20,000/-, ரூ.10,000/- மற்றும் ரூ.5,000/-க்கான காசோலை மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும்.
2025-ஆம் ஆண்டு, குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ள கபீர் புரஸ்கார் விருதிற்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள்/பரிந்துரைகள் இந்த நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே 15.12.2024-அன்று அல்லது அதற்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். பதக்கம் பெறத் தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்பட்டு, முதல்-அமைச்சரால் 26.01.2025 குடியரசு தினத்தன்று விருது வழங்கி கௌரவிக்கப்படுவர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.