scorecardresearch

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற ஆதார் கட்டாயம்; தமிழக அரசு அறிவிப்பு

Chief Minister’s Girl Child Protection Scheme | முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் சேர ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

Tamilnadu government schemes
Tamilnadu government schemes

தமிழக அரசின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்கு ஆதார் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

சமூக நலத் துறை சார்பில், முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைகளின் பெயரில் ரூ.50 ஆயிரம் வைப்பு நிதியாக தமிழ்நாடு மின் விசை நிதிநிறுவனத்தில் வைக்கப்படுகிறது. இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25 ஆயிரம் வீதம் வைப்பு நிதி செலுத்தப்படுகிறது. அந்த வைப்பு நிதிக்கான ஆவணம் குழந்தையின் பெற்றோரிடம் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், மத்திய அரசின் விதிகள் படி, திட்டப்பயனாளிகளின் ஆதார் இணைப்பு கட்டாயமாகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் வரும் பயனாளிகள், ஆதார் எண்ணை அடையாள ஆவணமாக சமா்ப்பிக்க வேண்டும். ஒருவேளை இதுவரை ஆதார் எண் பெறப்படாத நிலையில், ஆதாருக்கு பெற்றோர் மூலம் விண்ணப்பித்து, அதைக் கொண்டு திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பிக்க வேண்டும். ஆதாருக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் நிலையில், இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க, ஆதார் விண்ணப்பித்த போது வழங்கப்படும் ஆவணம் அல்லது ஆதார் பெறுவதற்கான விண்ணப்ப நகல் இணைக்க வேண்டும்.

அத்துடன், புகைப்படத்துடன் கூடிய வங்கிக்கணக்கு புத்தகம், பான் அட்டை, கடவுச்சீட்டு, குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட அட்டை, புகைப்படத்துடன் கூடிய கிசான் சேமிப்புக் கணக்குப் புத்தகம், ஓட்டுநா் உரிமம், வட்டாட்சியா் நிலையிலான அதிகாரியால் சான்றொப்பம் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய சான்றிதழ் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu government schemes cm child protection scheme aadhar