நேபாளத்துக்கு புனித யாத்திரை சென்று சிக்கித் தவிக்கும் 19 தமிழர்களை பத்திரமாக மீட்க இரண்டு அதிகாரிகளை அனுப்பியது தமிழக அரசு.
திபெத் எல்லையில் உள்ள கைலாஷ் மானசரோவர் பகுதிக்கு புனித யாத்திரை சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 19 பேர் கடுமையான மழையின் காரணமாக சிமிகோட் என்ற பகுதியில் சிக்கியுள்ளனர். நிலையற்ற வானிலை நிலவரத்தினால் அப்பகுதியில் விமானப் போக்குவரத்து 3 நாட்களாக முடங்கியுள்ளது. எனவே அவர்களால் அங்கிருந்து திரும்ப முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது.
சிமிகோட் பகுதியில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்கு சிக்கியுள்ள பலரும் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இருப்பினும் 19 தமிழர்களும் அங்கிருந்து மீட்கப்பட்ட்டார்களா என்ற தகவல் உறுதியாகவில்லை. இந்நிலையில் அவர்களை மீட்டு பத்திரமாக அழைத்துவர நேபாள் கஞ்ச் பகுதிக்கு இரண்டு தமிழக அரசு அதிகாரிகள் ராஜசேகர் மற்றும் சத்தியசிவம் ஆகியோர் விரைந்துள்ளனர். அவர்களைத் தொடர்பு கொள்ள உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
July 2018
19 தமிழர்கள் உட்பட இந்தியாவில் இருந்து சென்ற சுமார் 1,500 பேர் பல்வேறு இடங்களில் சிக்கித் தவித்து வருகின்றனர். இந்நிலையில், சிமிகோட்டில் இருந்து 160 பேர் பத்திரமாக நேபாள் கஞ்ச் பகுதிக்கு விமானங்கள் மூலம் மீட்டு வரப்பட்டதாக நேபாள சுற்றுலாத்துறை அமைச்சர் ரபீந்திர அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் 700 பேர் சிமிகோட்டில் உள்ளதாகவும் அவர்களை மீட்கும் பணி இன்று காலை தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் பற்றிய விவரத்தை முருகன் என்பவரைத் தொடர்பு கொண்டு அறியலாம் என அவரது செல்போன் எண்ணை இந்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த முருகன் என்பவரை மக்கள் +977 98085006 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம்.