தமிழக விவசாயிகள் தற்கொலை விவகாரத்தில் மாநில அரசின் பாராமுகத்திற்கு உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளியிட்டிருக்கிறது.
தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலையை தடுக்கக் கோரி மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவரும், டெல்லியில் 41 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தியவருமான அய்யாகண்ணுவும் இணைந்து கொண்டார். ஏற்கனவே இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு, ‘தமிழகத்தில் வயது முதிர்வு மற்றும் உடல்நலப் பிரச்னைகள் காரணமாகவே விவசாயிகள் இறந்திருக்கிறார்கள். வறட்சி காரணமாக யாரும் இறக்கவில்லை’ என தெரிவித்தது. இதற்கு அப்போதே தமிழக எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
நீதிபதி தீபக் மிஸ்ரா
இந்தச் சூழலில் மேற்படி வழக்கின் விசாரணை ஜூலை 7-ம் தேதி நீதிபதிகள் தீபக்மிஸ்ரா, கன்வில்கர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நரசிம்மா, ‘வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுவதாக’ தெரிவித்தார். இந்தப் பதில் நீதிபதிகளுக்கு திருப்தி அளிக்கவில்லை.
இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி மிஸ்ரா, ‘விவசாயிகளை பாதுகாப்பது மாநில அரசின் கடமை. இவர்களில் பலர் 41 நாட்கள் டெல்லியில் முகாமிட்டு போராட்டம் நடத்தினர். அதன்பிறகும் மனிதாபிமான நடவடிக்கைகளை எடுக்காமல் அரசு மெளனம் காப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.’ என குறிப்பிட்டார்.
தொடர்ந்து, ‘எப்போதும் மத்திய அரசின் உதவியையே மாநில அரசு சார்ந்திருக்க முடியாது. விவசாயிகள் தங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்வதை தடுக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் தற்கொலையை தடுக்க உரிய முன்னெச்சரிக்கையை எடுக்காமல், அதன்பிறகு நிவாரணம் வழங்க தேடிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை’ என காட்டமாக கூறியிருக்கிறார்கள் நீதிபதிகள்.
நீதிபதி கன்வில்கர்
இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவும் வகையில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சங்கரநாராயணன், ‘மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் பாதிப்பு இருக்கிறது. எனவே விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க தேசிய அளவில் திட்டம் வகுக்கப்படுகிறது’ என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி மிஸ்ரா, ‘தமிழகத்தில் 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சியாக நிலைமை சீரியஸாக இருக்கிறது. அனைத்து மாநிலங்களையும் இணைத்து, இந்தப் பிரச்னையின் வீரியத்தை நீர்த்துப்போக செய்ய விரும்பவில்லை’ என கூறினார்.
விவசாயிகளின் மரணங்கள், நிவாரண உதவிகள் தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் தள்ளி வைத்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு தமிழக விவசாயிகள் பிரச்னைக்கு தேசிய அளவிலான முக்கியத்துவத்தை அதிகரித்திருக்கிறது. தவிர, மத்திய மாநில அரசுகள் இதில் அதிக அக்கறை காட்டவேண்டிய நெருக்கடியையும் உருவாக்கியிருக்கிறது.