தமிழக அரசு போட்டித் தேர்வுகளில் தமிழ் தகுதி தேர்வு கட்டாயம்: அரசாணை வெளியீடு

Tamilnadu News Update : தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்படும்.

Tamilnadu News Update : தமிழ்நாடு அரசுத்துறைகளில் உள்ள பணியிடங்களில் 100 சதவீதம் தமிழக இளைஞர்களை நியமனம் செய்யும் வகையில், தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டித்தேர்வுகளிலும் கட்டாயம் தமிழ் மொழித்தான் இடம்பெறும் என்று தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மனிதவள மேலான்மைத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்,

தமிழக அரசுத்துறையில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்யும் பொருட்டு, தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்படும்.

தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தேரிவு முகமைகளால் அரசுப்பணிகளுக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் அனைத்திலும் நியமன அலுவலர்களால் நேர்வுகளில் நடத்தப்படும் எழுத்து தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாளினை தகுதித் தேர்வாக கட்டாயமாக்க அரசு முடிவு மேற்கொண்டு அவ்வாறே ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

தமிழ் மொழித்தேர்வு நடத்தப்படும் வழிவகைகள் :

 தமிழ் மொழித் தகுத் தாள் தேர்வர்கள் அனைவருக்கும் கட்டாயமாக்கப்படுகிறது.

தமிழ் மொழித் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்புத் தரத்தில் நிர்ணையம் செய்யப்படுகிறது.

கட்டாய தமிழ்மொழித் தாளில் குறைந்த பட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி கட்டாயமாக்கப்படுகிறது. தகுதித் தாளில் தேர்ச்சி பெறாதவர்களின் இதர போட்டித் தேர்வுத்தாள் தாட்கள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற முதனிலை மற்றும் முதன்மை எழுத்து தேர்வு என்ற இரண்டு நிலைகளை கொண்டதாக உள்ள தொகுதி I, II மற்றும் IA ஆகிய அனைத்துப்போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி தகுதித்தேர்வானது முதன்மைத் தேர்வுடன் விரிந்துரைக்கும் வகையிலான தேர்வாக அமைக்கப்படும்.

முதன்மை எழுத்துத்தேர்வானது மொழிபெயர்த்தல், சுருக்கி வரைதல், பொருள் உணர்திறன், சுருக்க குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல் கடிதம் வரைதல், மற்றும் கட்டுரை வரைதல் உள்ளிட்ட தலைப்புகளை கொண்டதாக இருக்கும்.

இத்தேர்வு 100 மதிப்பெண்கள் கொண்டதாக அமைக்கப்படும். இத்தகுதித்தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி பெற்றால் மட்டுமே முதன்மை எழுத்துத்தேர்வின் இதர போட்டித் தேர்வுகள் தாட்கள் மதிப்பீடு செய்யப்படும்.

தற்போது நடைமுறையில் உள்ள பொதுத்தமிழ் மற்றும் பொது ஆங்கிலம் உள்ள தேர்வுகளில், பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு பொதுதமிழ்தாள் மட்டுமே மதிப்பீட்டுத் தேர்வாக அமைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

போட்டித் தேர்வுகளில் தமிழ் கட்டாயம் என்பது வரலாற்று சிறப்புமிக்க அரசாணை. போட்டித்தேர்வுகளில் தமிழ்  கட்டாயம் என்பதால் அரசுப்பள்ளிகளில் மாணவர்சேர்க்கை அதிகரிக்கும் இதனை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது என்று தமிழ் நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் பி.கே.இளமாறன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த ஐந்தாண்டுகளில் வடமாநிலத்தோர் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அதிகமானோர் ஆக்கிரமித்ததால் லட்சக்கணக்காணோர் படித்த தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரசு பணி கனவாகிப்போனது.

தற்போது அரசாணை 133 ன்படி போட்டித்தேர்வுகளில் தமிழ் கட்டாயமாக்கப்பட்டுள்து. குறிப்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் நடத்தும் தேர்வாணையத்தில் நிலை1,2,2A போட்டித்தேர்வுகளில் தமிழ் தேர்வில் 100 மதிப்பெண்களில் 40 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே மற்ற முதன்மைத்தாள்கள் திருத்தப்படும் என்ற அறிவிப்பு ஒட்டுமொத்த தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றப்போகும் இனிப்புசெய்தி. இந்த வரலாற்று சிறப்புமிக்க அரசாணையினால் எதிர்காலத்தில் அரசுப்பள்ளிகளின் கெளரவம் உயரும். மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் மாண்புமிகு. முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu government strict order for tamil is compulsory in competitive exam

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com